தொடர் மழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் 71 அடியாக எட்டியுள்ளது!

தொடர் கன மழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் 71 அடியாக எட்டியுள்ளது. அணையில் இருந்து உபரி நீர் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. இந்த அணையின் முழு கொள்ளளவு 69 அடியாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வந்தது. குறிப்பாக நீர்ப்பிடிப்பு பகுதிகளான வருசநாடு, வெள்ளிமலை, அரசரடி, மூல வைகை, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் முல்லை பெரியார், கொட்டக்குடி ஆறு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. மேலும் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீரும் திறக்கப்பட்டது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதையடுத்து 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, ஆற்றை கடக்கவோ, இறங்கவோ, குளிக்கவோ, துவைக்கவோ கூடாது என்று பொதுப்பணித்துறை அறிவுறுத்தப்பட்டது.

இந்தநிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் விடுத்துள்ள அறிக்கையில்; பொதுவாக வைகை அணையின் நீர்மட்டம் 69 அடி வந்தவுடன், அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் தண்ணீரை அப்படியே உபரிநீராக திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை அனைத்து பகுதிகளிலும், பரவலாக மழை பெய்து வருவதால், அணையின் நீர்மட்டத்தை 71 அடியாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் நீர்வரத்து அதிக அளவில் இருப்பதால் அணையின் நீர்மட்டம் 71 அடியை இன்று எட்டியது. இதையொட்டி பாதுகாப்பு கருதி அணையில் இருந்து இன்று வைகை ஆற்றுப்படுகையில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. தற்போது வைகை அணையின் இருப்பு 5900 மில்லியன் கன அடியாகவும், வைகை அணைக்கு நீர் வரத்து 2800 கனஅடியாகவும் உள்ளது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு வைகை அணை 71 அடியை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.