பருவநிலை மாற்றம்: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் குழு அமைப்பு!

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாக குழு அமைக்கப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது தேவைக்கு ஏற்பவோ காலநிலை மாற்ற நிர்வாக குழு கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் பொருட்டு பல்வேறு திருப்புமுனை முயற்சிகளை மேற்கொள்வதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. இம்முயற்சி பாதையில், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், பசுமை தமிழக இயக்கம் மற்றும் தமிழ்நாடு சதுப்புநில இயக்கம் ஆகிய மூன்று முக்கிய இயக்கங்களை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ளது. காலநிலை செயல்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல, தமிழ்நாடு பசுமை காலநிலை மாற்ற நிறுவனம் என்னும் சிறப்பு செயல்பாடு நிறுவனத்தை தமிழகம் அமைத்துள்ளது. கொள்கை வழிகாட்டுதல் தமிழ்நாடு காலநிலை மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தணிப்பது மாற்ற இயக்கத்திற்கு கொள்கை வழிகாட்டுதலை வழங்கவும், காலநிலை மாற்றத்திற்கான தகவமைப்பு தொடர்பான ஆலோசனைகளை வழங்கவும், தமிழ்நாடு மாநில காலநிலை செயல்திட்டத்தினை மாற்ற உருவாக்கி அதனை செயல்படுத்துவதற்கான உரிய வழிகாட்டுதல்களை வழங்கும் பொருட்டு தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவினை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதலுடன், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை இதற்கான அரசாணையினை வெளியிட்டுள்ளது. இக்குழுவில், பல்வேறு முக்கிய துறைகளின் அனுபவமிக்க மூத்த அரசு செயலாளர்கள் தவிர காலநிலை மாற்றம் தொடர்பான இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். பல்வேறு பிரிவுகளின் வல்லுநர்கள் அவர்களின் தலைமையில் செயல்படும். இந்த நிர்வாகக் குழுவானது தமிழ்நாடு அரசின் முதலைமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், பொருளாதார நிபுணரான மாண்டேக் சிங் அலுவாலியா, இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் நந்தன் எம்.நிலக்கேனி, ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் துணை பொதுச் செயலாளர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டத்தின் 6வது செயல் இயக்குநர் எரிக்.எஸ்.சோல்ஹிம், நிலையான கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநர் ரமேஷ் ராமச்சந்திரன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன், ராம்கோ சமூக சேவைகளின் தலைவர் நிர்மலா ராஜா ஆகியோர் இந்நிர்வாக குழுவின் சிறப்பு உறுப்பினர்களாவர்.