சென்னை காசிமேடு துறைமுகம் ரூ.97 கோடியில் சர்வதேச தரத்துக்கு மேம்படுத்தப்பட உள்ளது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
சென்னை ராயபுரத்தில் உள்ள மத்திய மீன்வள நிறுவனத்தின் கடல் மற்றும் பொறியியல் பயிற்சி பிரிவில் தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் செயல்பாடுகளை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் நிகழ்வில் அமைச்சர் பேசியதாவது:-
தூய்மை பாரதம் திட்டம் 2.0 படி அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேவையற்ற கோப்புகள் நீக்கப்பட்டு, துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய மீன்வள நிறுவனத்தின் கடல் மற்றும்பொறியியல் பயிற்சி பிரிவில் தேவையற்ற பொருட்கள் மூலம் அரசுக்கு ரூ.90 ஆயிரம் வருவாய் கிடைத்துள்ளது. மேலும், ரூ.6 லட்சம் விரைவில் கிடைக்க உள்ளது. மீன்வளத் துறைக்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்ததிலிருந்து இதுவரை ரூ.32 ஆயிரம் கோடி அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீன்பிடி மற்றும் மீன் வளர்ப்பு உள்கட்டமைப்புகளை மேம்படுத்தத் தமிழகத்துக்கு மட்டும் சுமார் ரூ.1,800 கோடி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை காசிமேடு துறைமுகம் ரூ.97 கோடியில் சர்வதேச தரத்துக்கு மேம்படுத்தப்பட உள்ளது. ராமேஸ்வரத்தில் கடற்பாசி பூங்கா அமைக்க விரைவில் ஒப்புதல் வழங்கப்பட உள்ளது. மீன் உற்பத்தி, ஏற்றுமதியில் இந்தியா 2ஆவது இடத்தில் உள்ளது. இறால் ஏற்றுமதியில் முதல் இடத்தில் உள்ளது. கொரோனா காலத்திலும் மீன் ஏற்றுமதி 32 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.