தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: எடப்பாடியை கைது செய்யணும்: திருமுருகன் காந்தி!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்றும் இதற்கு காரணமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலரை கைது செய்ய வேண்டும் என்று திருமுருகன் காந்தி பேட்டியளித்துள்ளார்.

மே பதினேழு இயக்க தலைவர் திருமுருகன் காந்தி நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் விரிவான அறிக்கையை கொடுத்து இருக்கிறது. இந்த அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சியான தகவல்களை வெளியில் கொண்டு வந்திருக்கிறது என்பது மறுக்க இயலாத ஒன்று. இந்த அறிக்கையின் அடிப்படையில் குற்றம் இழைத்தவர்கள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வர் வாக்குறுதி கொடுத்து இருப்பது வரவேற்புக்கு உரியது.

தமிழகத்தின் வரலாற்றில் மிக மோசமான கரும்புள்ளியாக இந்த ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு நடந்து இருக்கிறது. இந்த அறிக்கையின் மூலம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், தீயணைப்புத்துறை அதிகாரிகள், மருத்துவ பணியாளர்கள் என அனைத்து துறையினரும் இந்த சம்பவம் நடப்பதற்கு ஏதேனும் ஒரு வகையில் உதவி செய்து இருப்பதாகத்தான் இந்த அறிக்கையினுடைய சாராம்சம் ஆக அமைந்து இருக்கிறது. இந்த அறிக்கையில் குறிப்பிடாத தகவலை நாங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம். இந்த ஒட்டு மொத்த படுகொலைக்கும் பின்னணியில் இருப்பது அரசு அதிகாரிகளின் அலட்சிய போக்கோ செயலற்ற தன்மையோ ஒருங்கிணைப்பு இன்மையோ மட்டுமே காரணமாக அறிக்கை முன்வைக்கிறது. ஆனால் அதை நாங்கள் ஒரு பகுதியில் ஏற்றுக்கொண்டாலும் இந்த படுகொலைக்கு காரணமாக இருப்பது ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் நேரடி தலையீடு என்ற குற்றச்சாட்டை நாங்கள் முன்வைக்கிறோம். இந்த படுகொலையில் ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு எந்த பங்கும் இல்லை என்ற பிம்பத்தை அறிக்கை கொடுத்து இருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது. துப்பாக்கிச்சூடு நடத்தப்பட வேண்டும் என்ற முன்முடிவு இருந்து இருப்பதை இந்த அறிக்கை தெளிவாக சுட்டிக்காட்டியிருக்கிறது. துப்பாக்கிச்சூடு என்பது திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்றாகவே பார்க்கிறோம்.

இந்த துப்பாக்கிச்சூடு உயர்மட்ட அளவில் தெரியாமல் நடந்து இருக்க வாய்ப்பு இல்லை. திட்டமிட்டே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. எடப்பாடி அரசு திட்டமிட்டு ஸ்டெர்லைட் நிறுவனத்தை காப்பாற்றுவதற்காகவும் போராடுகின்ற மக்களை துப்பாக்கிச்சூடு நடத்தி அவர்களை அச்சுறுத்துவதற்குமான வேலையை திட்டமிட்டு செய்து இருக்கிறார்கள். ஒன்றிய அரசும் இதற்கு பின்னால் இருந்து செயல்பட்டு இருக்கிறது.

அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையில் கூறியுள்ள 17 பேர் மீதும் துறை ரீதியிலான நடவடிக்கை இல்லாமல், கொலை வழக்கு பதிவு செய்வதுடன், அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அப்போதைய தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆகியோர் மீதும் கொலைவழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும். எடப்பாடி பழனிசாமி பச்சையாக பொய் சொல்லி இருக்கிறார். ஸ்டெர்லைட் நிறுவனம் தமிழகத்தில் இருந்து முற்றிலும் வெளியேற்ற வேண்டும் என்ற கொள்கை தீர்மானம் எடுத்து உடனடியாக வெளியேற்ற வேண்டும். இதற்கு மேல் ஸ்டெர்லைட் நிறுவனத்தை அனுமதிக்க முடியாது.

ரஜினிகாந்த் போன்றவர்கள் எல்லாம் வேதாந்தா என்ன சொல்கிறது.. பாஜக என்ன சொல்கிறது ஆளும் கட்சி என்ன சொல்கிறது என கேட்டுக்கொண்டு வந்து பேசக்கூடாது. தெரிந்ததை பற்றி மட்டுமே பேச வேண்டும். மக்களுடைய போராட்டங்களில் பங்கெடுக்காமல் மக்கள் பிரச்சினையை காது கொடுத்து கேட்காமல் மக்களோடு சேர்ந்து நிற்காமல் இவர்களாக சமூக விரோதிகள் என்று சொல்கிறார்கள். இன்றைக்கு சமூகத்தை காக்கக் கூடியவர்களாக நாங்கள்தான் இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.