கோவை மாநகரம் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறது: அண்ணாமலை!

கோவை மாநகரம் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறி வருவதாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை உக்கடம், கோட்டை ஈஸ்வரன் கோயில் பகுதியில் நேற்று முன் தினம் அதிகாலை 4 மணிக்கு, காரின் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த நபர் உயிரிழந்த நிலையில், விசாரணைக்காக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார். கார் வெடிவிபத்தில் இறந்தவர் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பதும், அவர் பழைய துணி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது. ஏற்கனவே அவரிடம் 2019ம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தியதும், போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டதும் கண்டறியப்பட்டது. ஜமேசா முபின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் நாட்டு வெடிகுண்டு செய்வதற்கான மூலப் பொருட்கள் அவர் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டது. இந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர்.

பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கோவையில் கடந்த 1998ஆம் ஆண்டு குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. அதிலிருந்தே பதற்றமான பகுதியாக மாறி விட்டது கோவை மாநகரம். ஜூன் 2019ஆம் ஆண்டே அங்கே தீவிரவாதிகள் பதுங்கியிருந்ததை கண்டு பிடித்து 5 பேரை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் முகம்மது அசாருதீன், கேரளாவில் உள்ள அபுபக்கருடன் தொடர்பில் இருந்தவர்கள். இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய ஐஎஸ்ஐஎஸ் ஜெகரான் ஹாஸ்மி என்பவருடன் அபுபக்கரும், அசாருதீனும் தொடர்பில் இருந்தவர்கள். பேஸ்புக், டெலிகிராம் மூலம் தொடர்பில் பேசியவர்கள். ஜெகரான் ஹாஸ்மி ஏராளமானோரை மூளைச்சலவை செய்து தற்கொலை படை தாக்குதலுக்கு உத்தரவிட்டவர். இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழக்க காரணமானவர்கள். அவர்களுடன் கோவையில் இருந்தவர்களுக்கும் தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டது.
ஜமேஷா முபீன் என்பவரும் என்ஐஏ விசாரணையில் இருந்தவர்.

கடந்த 23ஆம் தேதி கோவையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பின் போது காரை ஓட்டி வந்தவர் பெயர் ஜமேஷா முபீன் என்று 24 மணிநேரம் கழித்துதான் காவல்துறை கூறினர். இது தீவிரவாத தாக்குதல் என்று பாஜக சொன்ன போதும், அதை காவல்துறை ஒப்புக்கொள்ளவில்லை. சிலிண்டர் வெடி விபத்து என்றுதான் கூறப்பட்டது. ஜமேஷா முபீன் வீட்டை சோதனை செய்த போது 55 கிலோ அமோனியம் நைட்ரைட், பொட்டாசியம் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தற்கொலைப்படை தாக்குதல் என்று பாஜக குற்றம் சாட்டியது. காரை ஓட்டு வந்த ஜமேஷா முபீன் தற்கொலை தாக்குதலுக்கு தயாராகி வந்தவர். ஜமேஷா முபீன் இறப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்புதான் தன்னுடைய வாட்ஸ் அப்பில், “என்னுடைய இறப்புச் செய்தி உங்களை வந்தடையும் போது நான் செய்த தவறை மன்னிட்டு விடுங்கள்.. என்னுடைய குற்றங்களை மறந்து விடுங்கள் என்று கூறியிருந்தார். என்னுடைய இறுதிச்சடங்கில் பங்கேற்று அனைவரும் எனக்காக பிராத்தனை செய்யுங்கள் என்று எழுதியிருந்தார். ஜ

இது முற்றிலும் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினரும் அவர்களுடன் தொடர்புடையவர்களும் பயன்படுத்தக்கூடிய வார்த்தைகள். அதே வார்த்தைகளைத்தான் அக்டோபர் 21ஆம் தேதியன்று ஜமேஷா முபீன் பயன்படுத்தியுள்ளார். ஜமேஷா முபீன் வீட்டில் இருந்து கனமான பொருட்களை எடுத்துச்சென்றனர். அதை ஊடகங்களில் வெளியிட்டனர். எதற்காக கோவையில் இன்றைய தினம் 5 பேர் கைது செய்யப்பட்டனர். முகமது தல்கா முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய ஐந்து பேரும் ஏன், எதற்காக? எந்த செக்சனில் கைது செய்யப்பட்டிருக்கிறோம் என்று எதுவுமே கூறாமல் காவல்துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். சிலிண்டர் வெடி விபத்தில் கைது செய்யப்பட்டதாக கூறியுள்ளனர். 8 பேரை காவல்துறையினர் காவலில் வைத்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையினர் எந்த விபரத்தையும் கூறாமல் அனைவரையும் முட்டாள் ஆக்குகின்றனர். இவ்வாறு அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.