தகுதி நீக்க வழக்கை எதிர்த்த இம்ரான் கான் மனு தள்ளுபடி!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அரசு பதவி வகிக்க 5 ஆண்டுகளுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை ரத்து செய்ய கோரிய மனுவை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், 2018ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று அந்நாட்டு பிரதமராக பொறுப்பேற்றார். இந்நிலையில் அவரது அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதை அடுத்து, அவர் கடந்த ஏப்ரலில் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, பாக்., முஸ்லிம் லீக் கட்சி தலைவர் ஷெபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பொறுப்பேற்றார்.

இம்ரான் கான் பதவி வகித்த காலத்தில் பல்வேறு அரபு நாடுகளுக்கு சென்றபோது பல விலை உயர்ந்த பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. அந்நாட்டு சட்டப்படி அதை, பரிசு பொருட்களுக்கான கருவூலத்தில் இம்ரான் கான் ஒப்படைத்தார். பின், சட்டத்துக்கு உட்பட்டு தள்ளுபடி விலையில் அந்த பொருட்களை அவர் பணம் கொடுத்து வாங்கி, அதிக லாபத்துக்கு விற்றார். இதில் கிடைத்த லாபத்தை தன் வருமான வரிக்கணக்கில் அவர் குறிப்பிடவில்லை என, ஆளுங்கட்சியினர் குற்றஞ்சாட்டினர்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய அந்நாட்டு தேர்தல் கமிஷன், இம்ரான் கானை ஐந்து ஆண்டுகளுக்கு அரசு பதவி வகிப்பதில் இருந்து தகுதி நீக்கம் செய்து சமீபத்தில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, அவர் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதில், ‘ஊழல் வழக்குகளில் முடிவெடுக்கவோ, தகுதி நீக்கம் செய்யவோ தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் இல்லை. எனவே, என் மீதான தகுதி நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என, கோரப்பட்டது. இந்த மனுவை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.