ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடியை தீபாவளியை கொண்டாடினார்!

கார்கில் எல்லைப் பகுதியில் தமிழ் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடியை தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

நாட்டின் பிரதமராக 8 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார் பிரதமர் மோடி. ஒவ்வொரு ஆண்டும் எல்லையில் உள்ள ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்று விடுவார். ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதிக்கு புறப்பட்டு சென்று ஆடல், பாடல், இனிப்புகள் என தீபாவளி களைகட்டும். அதுமட்டுமின்றி ராணுவ வீரர்கள் மத்தியில் சிறப்புரையாற்றி அவர்களை உத்வேகப்படுத்துவார். அந்த வகையில் நடப்பாண்டும் கார்கில் சென்று ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடியுள்ளார். எல்லையில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை நேற்று சந்தித்து வணக்கம் சொல்லி, கலந்துரையாடி, பிரதமர் செல்பி எடுத்துக் கொண்டார். அதேசமயம் இனிப்புகளை கைநிறைய அள்ளி வீரர்களின் வாயில் நிரம்ப நிரம்ப ஊட்டி விட்டார்.

இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி இணையத்தில் வைரலாகின. அதில் வட இந்திய மாநிலத்தை சேர்ந்த வீரர்கள் ”தாய் மண்ணே வணக்கம்” என்ற தேசப்பற்று பாடலை இந்தியில் பாடினர். அப்போது கைகளை தட்டி பிரதமர் மோடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதுதொடர்பான வீடியோவை தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ள இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், ”இதயம் இதயம் துடிக்கின்றதே.. எங்கும் உன்போல் பாசம் இல்லை.. ஆதலால் உன் மடி தேடினேன்.. தாய் மண்ணே வணக்கம்.. Happy Diwali everyone!” என்று பதிவிட்டுள்ளார்.

அதன்பிறகு குஜராத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் குஜராத்தி மொழியில் பாடல்கள் பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதையும் பிரதமர் கைகளால் தாளம் போட்டுக் கொண்டே மகிழ்ந்தார். பின்னர் தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள், ”சுராங்கனி சுராங்கனி சுராங்கனி.. சுராங்கனிக்க மாலுகெனா வா.. மாலு மாலு மாலு சுராங்கனிக்க மாலு.. சுராங்கனிக்க மாலுகெனா வா..” என்ற பாடலை பாடி தீபாவளியை கொண்டாடினர். அப்போது அவர்களது வாய் நிறைய இனிப்புகளை ஊட்டி பிரதமர் மோடி மகிழ்ந்தார். பாடலுக்கு ஏற்ப தாளமும் போட்டார். வீரர்களும் தமிழில் கலந்துரையாடியதை பார்க்க முடிந்தது. இதுதொடர்பான வீடியோக்கள் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளன.

பின்னர் கார்கில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி பேசியதாவது:-

தீபாவளி என்றால் ‘பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டும் பண்டிகை’ மற்றும் கார்கில் அதை சாத்தியமாக்கியது.
வெற்றி பெற்ற இந்த கார்கில் மண்ணிலிருந்து, நாட்டு மக்களுக்கும், உலக மக்களுக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துகள். கார்கில் போரில் வெற்றிக் கொடியை ஏற்றாத பாகிஸ்தானுடன் ஒரு போர் கூட நடந்ததில்லை. கார்கில் ராணுவம், பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்ணை நசுக்கியது, நாட்டு மக்கள் அன்று கொண்டாடிய தீபாவளியை இன்றுவரை நினைவில் கொண்டுள்ளனர். என்னைப் பொறுத்தவரை, நீங்கள் அனைவரும் பல ஆண்டுகளாக எனது குடும்பத்தில் ஒருவராக இருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் மத்தியில் தீபாவளியைக் கொண்டாடுவது எனக்கு கிடைத்த பாக்கியம்.

ஒரு தேசத்தின் எல்லைகள் பாதுகாப்பாகவும், பொருளாதாரம் வலுவானதாகவும், நம்பிக்கை நிறைந்த சமூகமாகவும் இருக்கும்போதுதான் அந்த தேசம் பாதுகாப்பாக இருக்கும். நாங்கள் போரை முதல் விருப்பமாக பார்த்ததில்லை. இலங்கையில் நடந்த போராக இருந்தாலும் சரி, குருக்ஷேத்திரத்தில் நடந்த போராக இருந்தாலும் சரி, அதை எப்போதும் இறுதி முயற்சியாக ஒத்திவைக்கவே முயற்சிக்கிறோம். நாங்கள் போருக்கு எதிரானவர்கள். ஆனால், வலிமை இல்லாமல் அமைதியை அடைய முடியாது. யாரேனும் நம்மை தீய நோக்கத்தோடு பார்க்கத் துணிந்தால், நமது முப்படை வீரர்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.

புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது, எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்புரகளை மேம்படுத்துவது, பாதுகாப்பு படைகளில் பெண்களுக்கு பணி அளிப்பது போன்ற சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. 400-க்கும் மேற்பட்ட வகை பாதுகாப்பு உபகரணங்களை இறக்குமதி செய்யாமல், மாறாக இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதற்கு முடிவு செய்த 3 ஆயுதப்படைகளையும் பாராட்டுகிறேன். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களுடன் நமது வீரர்கள் சண்டையிடும் போது, எதிரிகளை தோற்கடித்த பெருமை மட்டுமல்ல, ஆச்சரியமும் கூடும்..

நமது எல்லைகளை ஆயுதப்படைகள் பாதுகாப்பதால் தான், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் நிம்மதியாக உறங்குகிறார்கள். இந்தியாவின் ஆயுதப் படைகளின் வீரர்களுக்கு நான் தலைவணங்குகிறேன். உங்களின் தியாகங்கள் நம் நாட்டை எப்போதும் பெருமைப்படுத்துகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.