மர்ம நபர் தாக்கியதில் படுகாயம் அடைந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, ஒரு கண் பார்வையை இழந்துள்ளார். மேலும், ஒரு கை செயல்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் பிறந்தவர் பிரபல எழுத்தாளர், நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி. இவர், 1988ல் எழுதிய, ‘சட்டானிக் வெர்சஸ்’ என்ற நாவல், முஸ்லிம் மதத்தினரை அவமதிப்பதாக உள்ளதாக அப்போது குற்றச்சாட்டு எழுந்தது.
அப்போது, ருஷ்டியை கொலை செய்தால் பரிசளிப்பதாக, மேற்காசிய நாடான ஈரானின் முஸ்லிம் மதத் தலைவரான அயதுல்லா கொமினி அறிவித்தார். அதையடுத்து தலைமறைவாக இருந்து வந்தார் சல்மான் ருஷ்டி.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த, ஆகஸ்ட் மாதம் நடந்த இலக்கிய நிகழ்ச்சியில் சல்மான் ருஷ்டி பங்கேற்றார். அப்போது, முகமூடி அணிந்திருந்த ஒருவர் மேடையேறி, சல்மான் ருஷ்டியை கத்தியால் சரமாரியாக குத்தினார். கைது செய்யப்பட்ட அந்த நபரின் பெயர் ஹாடி மாட்டர், 24 என்பது தெரியவந்தது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சல்மான் ருஷ்டி உடல் நலம் தேறி வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கத்திகுத்து தாக்குதலில், சல்மான் ருஷ்டி, ஒரு கண் பார்வையை இழந்துள்ளார். மேலும், நரம்பு துண்டிக்கப்பட்டதால், ஒரு கை செயலிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.