உக்ரைன் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறி, போரில் அணு ஆயுத தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டு வருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் 8 மாதங்களாக நீடித்து வரும் நிலையில், கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் ரஷ்ய படைகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. முன்னதாக உக்ரைன் இந்த வாரம் ரசாயன வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டி இருந்தது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறி, இந்த போரில் அணு ஆயுத தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டு வருவதை இது காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார். அது போன்ற தாக்குதல்களை நடத்தினால் அது ரஷ்யாவின் மிக கடுமையான தவறாக கருதப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள இந்திய தூதரம், உக்ரைனில் மீதம் உள்ள அனைத்து இந்தியர்களும் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தி உள்ளது. தொடர்ந்து மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமையை கருத்தில் கொண்டு உக்ரைனில் இருந்து வெளியேற கிடைக்கும் வழிகளை இந்தியர்கள் பயன்படுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 19ந் தேதி இந்தியர்கள் வெளியேறுமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும், இதனால் ஏராளமான இந்தியர்கள் உக்ரைனை விட்டு வெளியேறி விட்டனர் என்றும் இந்திய தூதரக தகவல்கள் தெரிவித்துள்ளன.