தற்போது நிம்மதியாக உணர்கிறேன்: சோனியா காந்தி!

காங்கிரஸ் முழு பலத்துடனும் ஒற்றுமையுடனும் நாம் முன்னேறி வெற்றிபெற வேண்டும் என்று சோனியா காந்தி கூறினார்.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பதவி ஏற்றார்.நிகழ்ச்சியில் பங்கேற்ற சோனியா காந்தி பின்னர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பொறுப்பேற்ற பிறகு அவரது தலைமையால் கட்சி வலுவடையும் என்று நம்புகிறேன். புதிய காங்கிரஸ் தலைவர் மிகவும் அனுபவம் வாய்ந்தவர் என்பதும், ஒரு சாதாரண தொழிலாளியாக இருந்து தனது கடின உழைப்பின் மூலம் இவ்வளவு உயரத்திற்கு உயர்ந்திருப்பது எனக்கு மிகப்பெரிய திருப்தியாக உள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மல்லிகார்ஜுன கார்கே அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

காங்கிரஸ் முன்பு நிறைய சிரமங்களைச் சந்தித்தது. ஆனால் பிரச்சினைகளை சமாளிப்போம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நான் மிகவும் நிம்மதியாக இன்று உணர்கிறேன் நான் ஏன் இவ்வாறு சொல்கிறேன் என்று விளக்குகிறேன். உங்களின் அன்பையும், நீங்கள் எனக்கு அளித்த மரியாதையும் நான் என்னுடைய கடைசி மூச்சு இருக்கும் வரை மதிப்பேன். ஆனால் அந்த மரியாதை மிகப்பெரிய பொறுப்பு வாய்ந்தது. என்னால் முடிந்த அளவுக்கு எனது பணியினை நான் சிறப்பாக செய்தேன். என் தோல்களின் மேல் ஒரு சுமை இருந்தது. அந்த பொறுப்புகளில் இருந்து இன்று நான் விடுபடுகிறேன். அதனால் இயல்பாகவே நான் நிம்மதியாக உணருகிறேன்.

காங்கிரஸ் கட்சியின் தலைமை என்பது மிகப் பெரிய பொறுப்பு. இனி இந்த பொறுப்பு மல்லிகார்ஜுன கார்கேவினுடையது. காங்கிரஸ் கட்சி பல சவால்களை சந்தித்துள்ளது. அந்தச் சவால்களை நாம் எவ்வாறு எதிர்கொண்டோம். முழு பலத்துடன் ஒற்றுமையாக நாம் முன்னேறி வெற்றி பெற்றோம். தற்போது நமது முன்னால் நாட்டின் ஜனநாயக மதிப்புகளுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் மிகப் பெரிய சவால் உள்ளது. ஆனால் முழு பலத்துடனும் ஒற்றுமையுடனும் நாம் முன்னேறி வெற்றிபெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.