கோவை கார் வெடிப்பில் பாஜக அரசியல் ஆதாயம் தேட முயல்கிறது: திருமாவளவன்!

கோவை கார் வெடிப்பு விவகாரத்தை பயன்படுத்தி அரசியல் ஆதாயத்தை தேடுவதற்கான எல்லா முயற்சிகளையும் பாஜக மேற்கொள்ளும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். இக்கேள்விக்கு பதிலளித்த தொல் திருமாவளவன் கூறியதாவது:-

யாராக இருந்தாலும் மிகுந்த அதிர்ச்சி அளிக்க கூடிய ஒரு நிகழ்வு. முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இதில் பன்னாட்டு பயங்கரவாத அமைப்புகளுடைய தொடர்பு இருப்பதாக காவல்துறை அஞ்சுகிறது. அதன் அடிப்படையில் சிலரை கைது செய்துள்ளது. தமிழக காவல்துறை மற்றும் முதல்வரின் நடவடிக்கையை விடுதலை சிறுத்தைகள் கட்சி பாராட்டுகிறது. யாராக இருந்தாலும் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் மதத்தின் பெயரால் பயங்கரவாதத்தைகையில் எடுப்பது ஏற்புடையது அல்ல. அதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ளும் வகையில் தமிழக அரசும் ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது. அந்த வகையில் இந்த நடவடிக்கையை வரவேற்கவும் பாராட்டவும் கடமைப்பட்டு இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

பாஜக 31 ஆம் தேதி கோவையில் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது குறித்து செய்தியியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த திருமாவளவன் கூறியதாவது:-

என்.ஐ.ஏ வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. வேறு எந்த கோரிக்கையை வைத்து அவர்கள் கடையடைப்பு போராட்டத்தை நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை. கடையடப்பு மூலம் மேலும் பதற்றத்தை உருவாக்க அவர்கள் (பாஜக) கருதுகிறார்களோ என்ற ஐயம் எழுகிறது. பயங்கரவாத தொடர்பு இருக்கிறது என்ற நிலையில் தேசிய புலனாய்வு முகமை அதை ஆய்வு செய்ய முன்வந்துள்ள சூழலில் அதற்கு ஒத்துழைப்பு நல்குவதே ஜனநாயக சக்திகளின் கடமை. இந்த விவகாரத்தை பயன்படுத்தி அரசியல் ஆதாயத்தை தேடுவதற்கு எல்லா முயற்சிகளையும் பாஜக மேற்கொள்ளும். இந்த விவகாரத்தை ஒட்டுமொத்த சமூகத்தோடு தொடர்பு படுத்த முடியாது. இஸ்லாமிய இயக்கங்கள் அனைத்தையும் இதில் தொடர்பு படுத்த முடியாது. ஒருசில உதிரிகளாக இருக்கக்கூடிய தனிநபர்கள் இது போன்ற தொடர்புகளை வைத்திருக்கலாம். அவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இஸ்லாமிய இயக்கங்களே முன்வந்து வெளிப்படையாக அறிவித்துள்ளன. அதேபோல இஸ்லாமிய சமூகமும் அதை ஏற்கவில்லை. அதை ஊக்கப்படுத்தவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மாநில உரிமை அடிப்படையில் என்.ஐ.ஏவிடம் விசாரணை கொடுக்காமல் தமிழக அரசே விசாரித்து இருக்க வேண்டும் என்று சிலர் கூறுவது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், ”தமிழ்நாடு அரசின் மாநில உரிமை என்ற அடிப்படையில் அந்த கோணத்தில் இத்தகைய வாதம் சரி. ஆனால் பிராக்டிக்கலாக பார்த்தால் அந்த வழக்கை பன்னாட்டு பயங்கரவாத தொடர்பு என்கிற நிலையில் மத்திய அரசு கையில் எடுப்பதுதான் பொருத்தம். என்.ஐ.ஏவோடு எங்களுக்கு முரண்பாடு இருக்கிறது. முதன் முதலில் என்.ஐ.ஏ அறிவிக்கப்பட்ட போது அதை கடுமையாக எதிர்த்த இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி. இன்றைக்கும் தேசிய புலனாய்வு முகமை மாநில உரிமைகளை பறிக்கிறது என்கிற நிலைப்பாட்டில் எங்களுக்கு மாற்றம் இல்லை. ஆனால் இப்படிப்பட்ட வழக்குகளை மத்திய அரசு தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் அமைப்புகள் மூலம் விசாரிப்பதுதான் பொருத்தமானது” என்றார்.