அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரது சிலையை திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்!

சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள அம்பேத்கர் முழுவுருவச் சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் வழங்கிய அம்பேத்கர் முழுவுருவச் சிலையினை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், அம்பேத்கரின் 132-ஆவது பிறந்தநாளான கடந்த 14.4.2022 அன்று அம்பேத்கரின் முழு திருவுருவச் சிலை மணிமண்டபத்தில் நிறுவுவதற்காக வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலின் 14.5.2022 அன்று அம்பேத்கர் மணிமண்டபத்தில் அச்சிலையினை நிறுவுவதற்கான இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீயாய் வேலை செய்து அந்தப் பணிகளை விரைந்து முடித்தனர். அத்தோடு மட்டுமல்லாமல் அம்பேத்கர் மணிமண்டபமும் சீரமைக்கப்பட்டு புது பொலிவூட்டப்பட்டது.

நூலகங்களுக்கு புதுப் புத்தகங்கள் வாங்கப்பட்டு தனி நூலகர் ஒருவரும் பணியமர்த்தப்பட்டுள்ளார். அதேபோல் பாழடைந்து காணப்பட்ட கழிவறைகள் புதுப்பிக்கப்பட்டு மாற்றி கட்டப்பட்டுள்ளன. தனது கோரிக்கையை ஏற்று அம்பேத்கர் மணிமண்டபம் புதுப்பிக்கப்பட்டதாலும் தாம் வழங்கிய சிலையை ஏற்று அதனை அங்கு நிறுவியதாலும் விசிக தலைவர் திருமாவளவன் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.