அணு ஆயுதப் படை ஒத்திகையை பார்வையிட்டார் ரஷ்ய அதிபர்!

உக்ரைனுடனான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ரஷ்யாவின் அணு ஆயுதப் படைப் பிரிவு போர் ஒத்திகையை, அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின் பார்வையிட்டார்.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, கடந்த, பிப்ரவரியில் ரஷ்யா போரைத் துவக்கியது. எட்டு மாதங்களைக் கடந்தும், போர் தொடர்கிறது. ‘இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர அனைத்து வாய்ப்பையும் பயன்படுத்துவோம்’ என, ரஷ்ய அதிபர் புடின் கூறி வருகின்றார்.

இந்நிலையில், ரஷ்ய ராணுவத்தின் அணு ஆயுதப் படைப் பிரிவினர் நேற்று போர் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
இதன் ஒரு பகுதியாக, கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை சோதனை, கடல் பகுதியில் இருந்து ஏவுகணை செலுத்துவது உள்ளிட்ட போர் பயிற்சியில் இந்தப் படையினர் ஈடுபட்டனர். உக்ரைன் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால், அதற்கு தயாராகும் வகையில் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டதாக, ரஷ்யா கூறியுள்ளது.

இந்தப் போர் பயிற்சிகளை, அதிபர் புடின் பார்வையிட்டார். அவருக்கு, ராணுவ அமைச்சர் செர்ஜி ஷோய்கு பயிற்சி குறித்து விளக்கினார்.

முன்னதாக சீனா மற்றும் இந்திய ராணுவ அமைச்சர்களுடன், செர்ஜி ஷோய்கு தொலைபேசி வாயிலாக பேசினார். அப்போது, உக்ரைன் போர் நிலவரம் குறித்து அவர் விளக்கினார். இதில் அணு ஆயுதங்களை பயன்படுத்த உக்ரைன் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியதாக தெரிகிறது. ஆனால், இதை உக்ரைன் மறுத்துள்ளது.