இந்திய கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும், இந்திய அரசின் இந்தி திணிப்பு மற்றும் மாநில உரிமை பறிப்பு நடவடிக்கைகளைக் கண்டித்தும், நவம்பர் 1-ந்தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சென்னையில் ஆர்ப்பாட்டம்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்கும் என்ற வாக்குறுதிக்கு மாறாக, இந்தியை அனைத்துத் தளங்களிலும் திணிப்பதற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு முயற்சித்து வருகிறது. அண்மையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தலைமையிலான தேசிய அலுவல் மொழி தொடர்பான பாராளுமன்றக் குழு குடியரசுத் தலைவரிடம் அளித்துள்ள அறிக்கையானது இந்தி பேசாத மாநில மக்களின் மொழி உரிமைகளை முற்றாக அழிக்கும் வகையில் உள்ளது. இது ‘ஒரே தேசம்- ஒரே மொழி’ எனும் இந்தியப் பன்மைத்துவத்திற்கு எதிரான மேலாதிக்கப் போக்காகும்.
அடுத்து, இந்திய நாட்டை அண்டை நாடுகளின் ஊடுருவல் மற்றும் ஆக்கிரமிப்புகளில் இருந்து பாதுகாக்க வேண்டிய ஒன்றிய பா.ஜ.க. அரசு, நமது நாட்டின் இறையாண்மைக்கே வேட்டு வைக்கும் வகையில், சீன ராணுவத்தின் அத்துமீறலை- ஆக்கிரமிப்பை வேடிக்கைப் பார்க்கிறது. அதேவேளையில், இந்திய கடலோர காவற்படை தமிழ்நாட்டு மீனவர்களையே தாக்குவதும் துப்பாக்கி சூடு நடத்துவதுமாக இருக்கிறது. அண்மையில் கடலோர காவல் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழ்நாட்டு மீனவர் வீரவேல் என்பவர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் பலர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்திய கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும் இந்திய அரசின் இந்தி திணிப்பு மற்றும் மாநில உரிமை பறிப்பு நடவடிக்கைகளைக் கண்டித்தும், நவம்பர் 1-ந்தேதி சென்னையில் நடைபெறவுள்ள விடுதலைச் சிறுத்தைகளின் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டின் மொழி உரிமை உள்ளிட்ட மாநில உரிமைகள் மீது அக்கறையுள்ள அனைவரும் பங்கேற்க வேண்டுமாறு அறை கூவல் விடுக்கிறோம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.