எதிர்க்கட்சிகள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதால் கொழும்பில் பலத்த பாதுகாப்பு!

இலங்கை அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதால் தலைநகர் கொழும்பில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

இலங்கையில் தொடர்ந்துவரும் வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சியால் அங்கு மக்கள் போராட்டம் வெடித்தது. அதன் விளைவாக அங்கு ஆட்சி அதிகாரத்தில் இருந்த ராஜபக்சே குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக தூக்கியெறியப்பட்டனர். நாட்டின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே சில மாதங்களுக்கு முன் பொறுப்பேற்றார். நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தமது தலைமையிலான அரசு எடுத்து வருவதாகவும், பொருளாதாரம் சீரடைய இன்னும் ஓரிரு ஆண்டுகள் ஆகும்; அரசு எடுக்கும் பொருளாதார சீரமைப்பு நடவடிக்கைகளுக்கு நாட்டு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த நிலையில் ரணில் அதிபராக பொறுப்பேற்று மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டபோதும், நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை இன்னும் குறையவில்லை என்பதும் அவற்றுக்கான தட்டுப்பாடும் தொடர்ந்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. தங்களது இந்த குற்றச்சாட்டை வெளிப்படுத்தும் விதமாக, பிரபல இடதுசாரி கட்சியும், பிரதான எதிர்க்கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனாவும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.

எதிர்க்கட்சியின் அழைப்பை ஏற்று, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பொதுமக்களும் அதிகாலை முதலே தலைநகர் கொழும்பில் குவிய தொடங்கினர். அங்கு எந்த நேரமும் போராட்டம் வெடிக்கும் என்ற சூழல் நிலவுவதால் அதிபர் மாளிகை உள்ளிட்ட அரசு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசாரும் தீவிர ரோந்து பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். முக்கிய சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு, அவற்றை பாதுகாப்புப் படையினர் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். போராட்டக்காரர்கள், போலீசார், ராணுவம் என தலைநகர் கொழும்பில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.