பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வாகனத்தில் சிக்கி பெண் டி.வி. நிருபர் உயிரிழந்த நிலையில், பேரணி ரத்து செய்யப்பட்டு உள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டின் ஐ.எஸ்.ஐ. உளவு பிரிவு அமைப்பின் இயக்குனர் ஜெனரலை விமர்சித்து வருகிறார். இதேபோன்று, அவரது பதவி நியமனம் பற்றி பிரதமருடன் காரசார அறிக்கை மோதல்களிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், நேற்று 3-வது நாளாக ஹகீக்கி ஆசாதி என்ற பெயரிலான நீண்ட பேரணியை நடத்தினார். இதனை படம் பிடிப்பதற்காக உள்ளூரில் பிரபலம் வாய்ந்த சேனல் 5 என்ற தொலைக்காட்சி சேனலின் பெண் நிருபர் சடாப் நயீம் என்பவர் சென்று உள்ளார். இதில், இம்ரான் கானின் பிரசார வாகனத்தில் சிக்கி அவர் உயிரிழந்து உள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த இம்ரான் கான் தனது பேரணியை ரத்து செய்துள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில், இன்றைய(நேற்று) எங்களது பேரணியில், சேனல் 5 என்ற தொலைக்காட்சி சேனலின் பெண் நிருபர் சடாப் நயீம் பயங்கர விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பற்றி அறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த சோகமும் அடைந்தேன். எனது வருத்தங்களை விவரிக்க வார்த்தைகள் எதுவும் இல்லை. இந்த சோக தருணத்தில் அவரது குடும்பத்தினருக்காக வேண்டி கொள்கிறேன். இரங்கல் தெரிவிக்கின்றேன். இன்றைய எங்களது பேரணியை நாங்கள் ரத்து செய்து உள்ளோம் என தெரிவித்து உள்ளார்.