திமுக பேச்சாளர் சைதை சாதிக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய அண்ணாமலை கைது!

திமுக பேச்சாளர் சைதை சாதிக்கை கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொட்டிய மழையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் குடை பிடித்தபடி பாஜக மகளிரணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதனிடையே அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார்.

பாஜகவைச் சேர்ந்த நடிகைகள் குஷ்பு சுந்தர், நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோர் குறித்து திமுக பேச்சாளர் சைதை சாதிக் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் சைதை சாதிக்கை கண்டித்து சென்னையில் இன்று பாஜக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

அமைச்சர் மனோ தங்கராஜ் தூண்டுதலின் பேரில் சாதிக் பாட்சா, பாஜக பெண் நிர்வாகிகளை தவறாக பேசி விட்டு சுதந்திரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறார். அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் குரல் வளையை நெறித்து காவல்துறை கைது செய்ய நினைத்தால் வருவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். பாஜக சட்டத்துடன் ஒத்துப் போகிற கட்சி. சட்டம் தற்போது தன்னுடைய கடமையை தவறாக செய்கிறது. எங்களிடம் நீங்கள் காட்டும் வீரத்தை தவறு செய்பவர் மீது காவல்துறை நண்பர்கள் காட்ட வேண்டும்.

டெல்லியில் நிர்பயாவுக்கு நடந்தது போன்ற தமிழகத்திலும் பலாத்காரம் நடக்கிறது. தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. காரணம் திமுக கட்சியினர் ஆபாசமாக பேசுகின்றனர். திமுக என்றாலே ரவுடிக்கட்சி என்ற பெயரை வாங்கி உள்ளது. பெண்கள் என்றாலே திமுகவுக்கு ஓட்டுப் போடமாட்டேன் என்ற எழுதப்படாத சட்டமாக இருக்கிறது. பெண்கள் போர் கொடியை தூக்கிய பிறகு மக்களுடைய நம்பிக்கை திமுக இழந்து இருக்கிறது. குறிப்பாக சகோதர சகோதரிகளின் நம்பிக்கையை இழந்து இருக்கிறது. திமுகவில் ஆபாசமாக பேசும் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் பெண்கள் மீது யார் கை வைத்தாலும் அந்த நபரை நான் விட மாட்டேன் என்று முதலமைச்சர் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

இதையடுத்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக அண்ணாமலை உள்பட பாஜக மகளிர் அணியினரை சேர்ந்தவர்களை கைது செய்த காவல்துறையினர் பேருந்துகள் மூலம் அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

ஒரு கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கக் கூடிய ஒருவர் மாற்றுக் கட்சியின் மேடை பேச்சாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக இது போன்ற நிகழ்வுகளில் கட்சியின் இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட நிர்வாகிகளை கலந்துகொள்ள வைத்துவிட்டு மாநிலத் தலைவர்கள் ஒதுங்கிக் கொள்வார்கள். இதனிடையே குஷ்பு, வானதி சீனிவாசன், காய்த்ரி ரகுராம் உள்ளிட்டோர் பாஜக மகளிரணி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.