சனாதனவாதிகள் தேர்தலில் எஸ்சி, எஸ்டி இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட முடிவு செய்து விட்டார்களா என ரவிக்குமார் எம்.பி. காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்
எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் உள்ள இட ஒதுக்கீட்டை ரத்து செய்யவேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் அசோக்குமார் ஜெயின் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நவம்பர் 29 ஆம் தேதி விசாரிக்கவுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார், அரசு வேலை வாய்ப்புகளில் இருக்கும் இட ஒதுக்கீட்டை இந்திய ஒன்றிய அரசு மட்டுமின்றி தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளும்கூட சரியாக நடைமுறைப்படுத்துவதில்லை. அதனால் ஒவ்வொரு துறையிலும் காலிப் பணியிடங்கள் பல்லாயிரக் கணக்கில் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இட ஒதுக்கீட்டில், அரசியல் பிரதிநிதித்துவத்துக்கான ரிசர்வேஷன் மட்டும்தான் தொகுதிகளை காலியாக விட முடியாது என்பதால் நிரப்பப்பட்டு வந்ததாக குறிப்பிடும் ரவிக்குமார் எம்.பி., அதிலும் கூட ராஜ்யசபா உள்ளிட்ட மேலவைகளில் ரிசர்வேஷன் இல்லை. எனவே அங்கு எஸ்சி, எஸ்டி பிரிவினர் 7-8% தான் உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
ராஜ்யசபா உள்ளிட்ட மேலவைகளில் இட ஒதுக்கீடு வேண்டும் என கன்ஷிராம் காலத்தில் பிஎஸ்பி குரலெழுப்பியது. இப்போது விசிக கேட்டு வருவதாக ரவிக்குமார் கூறியுள்ளார். மேலவைகளில் மட்டுமின்றி உள்ளாட்சி அமைப்புகளிலும் துணைத்தலைவர் பொறுப்புகளிலோ, வார்டு கமிட்டி, ஏரியா கமிட்டிகளிலோ இட ஒதுக்கீடு கொடுக்கப்படுவதில்லை. எனவே உள்ளாட்சி அமைப்புகளிலும் எஸ்சி, எஸ்டி பிரிவினர் சரியாக செயல்பட முடிவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும்கூட ரிசர்வேஷன் இல்லாவிட்டால் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு பிரதிநிதித்துவம் கிடைக்காது என்பதற்கு நீதித்துறையின் நிலையே சாட்சியாக உள்ளது. இந்த நிலையில், சனாதனவாதிகள் அரசியல் ரிசர்வேஷனையும் ஒழித்துக்கட்ட முடிவு செய்து விட்டார்களா? என ரவிக்குமார் எம்.பி., காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். இதனை எதிர்த்து சமூகநீதியின்பால் அக்கறையுள்ள கட்சிகள் குரல் கொடுப்பார்களா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.