வெள்ளம் பாதித்த எந்த பகுதிக்காவது எடப்பாடி பழனிசாமி வந்தாரா?: சேகர்பாபு

பெருமழை பாதிப்பு என சொல்லும் எடப்பாடி பழனிசாமி கடந்த 3 நாள்களில் ஒரு பகுதியில் கூட ஆய்வு செய்யாதது ஏன்? என அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை திரு.வி.க நகர் மண்டலத்தில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, எனக்கு நினைவு தெரிந்த காலம் முதல் சென்னையில் தண்ணீர் தேங்கிய பல இடங்களில் இந்த மழையின்போது தண்ணீர் தேங்கவில்லை. தென்சென்னை பகுதிகளில் பெரும்பாலாக எந்த பாதிப்பும் இல்லை. திரு.வி.க. நகரில் தேங்கி இருந்த 95% வெள்ள நீர் உடனடியாக அகற்றப்பட்டு விட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருத்துவ வசதி தொடர்ந்து வழங்கப்படும் என்று கூறினார்.

அப்போது எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்த கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, ‘அதிமுக ஆட்சியின்போது வெள்ளம் ஏற்பட்டபோது மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்யாத பகுதிகளே இல்லை. பெருமழை பாதிப்பு என சொல்லும் எடப்பாடி பழனிசாமி கடந்த 3 நாள்களில் எந்த பகுதிக்காவது வந்தாரா? நிவாரணப் பணிகள் ஏதும் செய்தாரா? என்று கேள்வி எழுப்பினார்.

முன்னதாக, சென்னையில் வடிகால் பணிகளை திமுக அரசு திட்டமிட்டு முடிக்காமல் தாமதம் செய்ததால் மழைநீா்த் தேங்கி பாதிப்பு ஏற்படுத்தியுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தத்து குறிப்பிடத்தக்கது.