மழை நீரைத் துரிதமாக அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக தேமுதிக தலைவா் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஒரு நாள் மழைக்கே சென்னை மாநகரம் வெள்ள நீரில் தத்தளிக்கிறது. வடிகால் பணிகள் மந்த கதியில் நடைபெறுவதால் மழைநீா் வெளியேற முடியாமல் சாலைகளில் பாய்ந்து ஓடுகிறது.
முதல்வா் தொகுதியான கொளத்தூரில் வீடுகளில் மழை நீா் புகுந்ததால் விடிய விடிய தூங்காமல் மக்கள் தவித்துள்ளனா். சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். தேங்கியுள்ள மழை நீரை அகற்ற தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.