பொறியியல் கல்லூரிகளில் தமிழ் பாடத்திட்டம் அறிமுகம்: அமைச்சர் பொன்முடி!

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் நிகழ் கல்வியாண்டு முதல் தமிழ் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி கூறினார்.

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள் ஆரணி, காஞ்சிபுரம், பண்ருட்டி, திண்டிவனம் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இயங்கி வரும் அண்ணா பல்கலைக் கழகத்தில் படித்த மாணவ மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது. இதில் பொன்முடி மாணவர்களிடம் பேசியதாவது:-

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் தமிழ் மீடியம் இல்லை என்கின்றனர். 2010ம் ஆண்டிலேயே அப்போதைய முதல்வர் கருணாநிதி கொண்டுவந்தார். தற்போது சிவில், மெக்கானிக்கல், கணினி பாடப்பிரிவுகள் தமிழ் வழி பொறியியல் படிப்புகள் உள்ளன. பல நாடுகளிலும் சென்று பணிபுரிய ஆங்கிலமும் வேண்டும், தாய்மொழியான தமிழும் வேண்டும். தமிழ் மொழியில் பொறியியல், மருத்துவம் படிப்பது தவறில்லை. அதேநேரத்தில், ஆங்கிலத்தை புறக்கணித்துவிடக் கூடாது. திராவிட மாடல் ஆட்சி இல்லையென்றால் தமிழை எப்போதோ ஒழித்திருப்பார்கள்.

ஹிந்தியில் பொறியியல் பாடங்களை கொண்டு வரலாம் என யாராவது சொல்லுங்கள். ஒருத்தரும் இல்லை.
ஹிந்தியை புகுத்தி அதில் பாடத்தை படிக்க வேண்டும் என்றால், இங்கு பலருக்கும் ஹிந்தி புரியாது. இதற்காக ஹிந்தி பேசும் மாநிலங்களில் இருந்து ஆட்களை இறக்குமதி செய்து கற்றுக்கொடுக்க வேண்டும்.
நாங்கள் ஹிந்திக்கு எதிரானவர்கள் அல்ல. ஹிந்தியை கற்றுக்கொள்ள விருப்பப்படுவோர் ஹிந்தியை கற்கலாம், கட்டாய பாடமாக ஹிந்தியை படிக்க வேண்டும் என்றால் ஏற்க மாட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.