சீமான் உளறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். சீமான் போன்றவர்கள் அரசியலில் விரும்பத்தகாத சக்திகள் என்று எச். ராஜா கூறினார்.
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் முன்னாள் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் இல்ல திருமண விழா வீரபாண்டி கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த திருமண விழாவிற்கு வருகை தந்த எச். ராஜா மற்றும் பாஜக சிறுபான்மை தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் மற்றும் தேனி பாஜக மாவட்ட தலைவர் பி.சி.பாண்டி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா கூறியதாவது:-
தமிழ்நாட்டை பொறுத்தவரை அதிமுகவுடனான கூட்டணியில் பாஜக தொடர்கிறது. அரசியல் ரீதியாக திமுகவுக்கு எதிர்நிலையில் பாஜக செயல்படுகிறது. 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைந்த நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையில் கூட்டணி அமையும். ஆனால் அதைப் பற்றி இப்போது பேச வேண்டிய தேவையில்லை என்று தெரிவித்தார்.
ஆர்எஸ்எஸ் பேரணி தொடர்ந்து ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கப்படாதது பற்றி கேள்விக்கு, ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கப்படாதது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நீதிமன்ற உத்தரவை மீறி தமிழக காவல்துறையும், தமிழக அரசும் செயல்படுகிறது என்று தெரிவித்தார்.
அதேபோல் கோவை விவகாரம் பற்றி கேள்விக்கு, தனது வாக்கு வங்கிக்காக என்ஐஏ விசாரணைக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார். ஆனால் என்ஐஏ விசாரணைக்கு மாநில அரசின் அனுமதி தேவையில்லை என்று தெரிவித்தார்.
தொடர்ந்து ஆளுநர் ஆர்என் ரவிக்கு எதிரான தமிழக அரசின் நடவடிக்கை பற்றி கேள்விக்கு, ஆளுநரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உண்டு. அதனால் ஆளுநரை பற்றி அவதூறாக பேசுவதை திமுக உள்ளிட்ட கட்சிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல் திருமாவளவன் ஒரு தீயசக்தி. பிஎப்ஐ அமைப்புக்கு ஆதரவாக பேசியவர் திருமாவளவன். அவர் பேசியதை பற்றி கவலையில்லை. ஆனால் திமுகவில் இருப்பவர்கள் பேசுவது சட்டத்திற்கு புறம்பானது. ஆளுநர் பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்வது திமுகவிற்கு நல்லது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள வடமாநில மக்களுக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது என்று சீமானின் கருத்து பற்றிய கேள்விக்கு, அப்போது மும்பை, டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கு யார் வாக்குறிமை அளிப்பார்கள். பிரபாகரன் ஆமைக்கறி கொடுத்தார் என்று கோமாளி பேசுவதை வைத்து நாம் என்ன சொல்ல முடியும். இதுதான் பிரிவினைவாதம். தமிழனே இல்லாத சீமான், இதைப் பற்றி பேச தேவையில்லை. அதனால் சீமான் உளறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். சீமான் போன்றவர்கள் அரசியலில் விரும்பத்தகாத சக்திகள் என்று தெரிவித்தார்.