ஆளுநரை பதவி விலக வேண்டுமென தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆளுநரை பற்றி தற்போது கருத்து கூறுவது ஏற்புடையது அல்ல என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
மதுரை நாகமலை புதுக்கோட்டையில் நடைபெற்ற அதிமுக பிரமுகர் காதணி விழாவில் தமிழக முன்னாள் முதல்வரும், தமிழக எதிர்கட்சி துணை தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். இதற்காக மதுரை வந்த அவரை நூற்றுக்கும் மேற்பட்ட கார்களில் அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், குழந்தைகளை ஆசீர்வதித்தார். ஓபிஎஸ் வருகையையொட்டி பிளக்ஸ் பேனர் அதிமுக கொடிகள் என அவரது ஆதரவாளர்கள் பிரம்மாண்டம் காட்டியிருந்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொண்டர்களின் இயக்கமாக உருவாக்கினார். அவரது வழியில் புரட்சித்தலைவி அம்மாவும் இந்த இயக்கத்தை தொண்டர்களின் இயக்கமாக யாரும் வெல்ல முடியாத இயக்கமாக வலுவாக வளர்த்தார். வலிமையான அ.தி.மு.க. என்ற இயக்கத்தை 50 ஆண்டுகளாக வளர்த்து வலிமையான இயக்கமாக இருபெரும் தலைவர்களும் தொண்டர்கள் கையில் தந்துள்ளனர். அ.தி.மு.க.வில் உள்ள அனைத்து தொண்டர்களும் ஒருங்கிணைந்து மேலும் இந்த இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
ஆளுநரை பதவி விலக வேண்டுமென தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆளுநரின் செயல்பாடு எப்படி உள்ளது என்று நிருபர்கள் கேள்வி விடுத்தனர். இதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம் ஆளுநரை பற்றி தற்போது கருத்து கூறுவது ஏற்புடையது அல்ல என்றும், தமிழகம் வரும் பிரதமரை சந்திக்க வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு பிரதமர் தமிழகம் வருவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அப்படி அவர் வந்தால் சந்திப்பேன் என்று தெரிவித்தார்.