இந்தியாவின் உச்சநீதிமன்றம் மற்றும் மாநில உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளை தேர்வு செய்யும் குழுவான கொலீஜியம் வெளிப்படைத் தன்மையுடன் இல்லை என மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு விமர்சித்து இருக்கிறார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, உச்சநீதிமன்றத்தின் 4 மூத்த நீதிபதிகளை கொண்ட குழு கொலீஜியம் என்று அழைக்கப்படுகிறது. இந்த குழு உச்சநீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிளை தேர்வு செய்து பரிந்துரைத்து வருகிறது. இதன் அடிப்படையிலேயே நீதிபதிகள் நியமனங்களும் நடைபெற்று வருகின்றன. ஆனால், கொலீஜியத்துக்கும் மத்திய அரசுக்கும் இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில் ஆங்கில தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது:-
நான் நீதித்துறை மீதோ, நீதிபதிகள் மீதோ விமர்சனங்களை வைப்பவன் இல்லை. ஆனால், இந்தியாவின் சாதாரண குடிமக்களின் மனநிலையை இங்கு சொல்ல விரும்புகிறேன். நீதிபதிகளை தேர்வு செய்யும் கொலீஜியம் முறை என்பது வெளிப்படைத் தன்மை இன்றிலும், கேள்வி கேட்க முடியாத இடத்திலும் இருந்து வருகிறது. நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் கூட இதையே சொல்கிறார்கள். சர்வதேச அளவில் நீதிபதிகள் நீதிபதிகளை நியமனம் செய்வது இல்லை. ஆனால், இந்தியாவில் அது நடக்கிறது. நீதிபதிகளை பரிந்துரை செய்வதற்கு நீதிபதிகள் அதிக நேரம் எடுத்துக்கொள்கிறார்கள். இந்த தேர்வு முறையில் நிறைய அரசியல் நடைபெறுகிறது. இந்தியாவில் உள்ள நீதிபதிகள் செய்யும் பணியை உலகின் வேறு எந்த நாட்டில் உள்ள நீதிபதிகளும் செய்வது கிடையாது.
நீதிபதிகளுக்கு ஓய்வு அவசியம். அவர்களுக்கு என்று நேரம் தேவை. நீதிபதிகளும் மனிதர்கள்தான். இயந்திரங்கள் கிடையாது. நிலுவையில் உள்ள வழக்குகளில் பாதிக்கும் மேற்பட்டவை பட்டியலிடவே தகுதியற்றவை. ஒவ்வொரு ஜாமீன் மனுவும் உச்சநீதிமன்றத்துக்கு செல்கிறது. உச்சநீதிமன்றம் ஏன் ஜாமீன் மனுவை விசாரிக்கிறது? தேவையற்ற வழக்குகள் இதுபோன்ற மனுக்களை கீழமை நீதிமன்றங்களே விசாரிக்க வேண்டும். உயர்நீதிமன்றங்களுக்கு குறைந்த அளவிலான ஜாமீன் மனுக்களே வர வேண்டும். உச்சநீதிமன்றத்தை மறந்துவிடுங்கள். மரண தண்டனை அல்லது அதற்கு தொடர்புடைய வழக்குகளை தவிர்த்து மற்ற வழக்குகள் தேவையற்றவை. பொதுநல வழக்குகள் சுயநலனுக்காக பொதுநல வழக்குகள் தொடுக்கும்போது அதை தள்ளுபடி செய்ய வேண்டும். எல்லா விசயமும் ஏன் நீதிமன்றத்துக்கு செல்கிறது என்பதே எனக்கு தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மத்திய சட்டத்துறை அமைச்சராக இருப்பவரே உச்சநீதிமன்ற செயல்பாடுகளை விமர்சித்து பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.