கெஜ்ரிவால் டெல்லியின் பகுதி நேர முதல்வராக இருக்கிறார்: பாஜக

டெல்லியில் நிலவும் மிக மோசமான காற்றுமாசுவைக் குறைக்க நடவடிக்கை எடுக்காமல், தேர்தல் நடக்கும் குஜராத் மாநிலத்துக்கே அதிக நேரம் செலவிடுவதாக, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடுமையாக விமரிசித்துள்ளது பாஜக.

டெல்லியில், பாஜக செய்தித் தொடர்பாளர் ஹரிஷ் குரானா பேசுகையில், டெல்லி முதல்வர், தலைநகருக்கு வெறும் இரண்டு மணி நேரம் தான் வருகிறார். இங்கு வந்து செய்தியாளர்களை சந்தித்துவிட்டு மீண்டும் குஜராத்துக்கே சென்று விடுகிறார். அவர் டெல்லியின் பகுதிநேர முதல்வராக செயல்படுகிறார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லிக்கு நேரம் ஒதுக்க கெஜ்ரிவாலால் முடியவில்லை என்றால், தலைநகர் டெல்லிக்கு முழு நேர முதல்வர் ஒருவரை நியமிக்கலாம். கெஜ்ரிவாலுக்கு 53 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரை முதல்வர் பதவிக்கு தேர்வு செய்யலாம் என்றும் குரானா கூறியுள்ளார். டெல்லியே மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது. ஆனால், டெல்லி முதல்வரோ இதர மாநிலங்களுக்கு சுற்றுலா சென்று கொண்டிருக்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டார்.