ஆந்திராவில் போலீசார் வழக்கு பதிவு செய்து 7 தனி படை அமைத்து சந்திரபாபு நாயுடு மீது கல் வீசி தாக்கியவர்களை தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநில முன்னாள் முதல்-அமைச்சரும் தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று இரவு என்.டி.ஆர் மாவட்டம், நந்தி கிராமம் அடுத்த ஜக்கைய்யா பேட்டை பகுதியில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் விலைவாசி உயர்வு குறித்து திறந்த வேனில் பிரசாரம் செய்தபடி ரோடு ஷோ நடத்தினார். அவருடன் சீனிவாஸ் எம்.பி, எம்.எல்.சி சத்திய நாராயண ராஜு, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சவுமியா ஸ்ரீராம் தாத்தையா ஆகியோர் உடன் சென்றனர். அப்போது அவர் பேசுகையில், ஆந்திராவில் ஜெகன் மோகன் ஆட்சியில் பெட்ரோல், டீசல், மளிகை பொருட்கள், மணல் உள்ளிட்டவைகளின் விலைவாசியை உயர்த்தி விட்டு வீடு வீடாக பென்ஷன் வழங்கி வருகிறார். வரும் சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும்போது ஜெகன்மோகன் ரெட்டி ஜெயிலுக்கு செல்வது நிச்சயம். அமராவதியில் தலைமைச் செயலகம் கட்ட ரூ. 2 லட்சம் கோடி செலவு செய்யப்பட்டது. அந்த பணத்தை ஜெகன்மோகன் வீணடித்துவிட்டு 3 இடங்களில் தலைமையகம் அமைக்க போவதாக கூறி வருகிறார். தற்போது ஆந்திர மாநில அரசு ரூ.8 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளதால் ஒவ்வொரு குடும்பத்தினர் மீதும் 1 லட்சம் கடன் உள்ளது. இவ்வாறு அவர் பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது அங்குள்ள வீட்டின் மாடியில் இருந்து சந்திரபாபு நாயுடுவின் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டது. இதனைக் கண்ட அவரது பாதுகாவலர்கள் சந்திரபாபு நாயுடுவின் மீது கல் படாமல் தடுத்தனர். அப்போது மர்ம நபர்கள் வீசிய கற்கள் பாதுகாவலர் முகத்தில் பட்டு ரத்தம் கொட்டியது. அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கூட்டத்தில் இருந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கல் வீசப்பட்ட வீட்டின் மாடிக்கு சென்று பார்த்தனர். அங்கு யாரும் இல்லை. கல்வீசிய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
அப்போது மீண்டும் பேசிய சந்திரபாபு நாயுடு நான் தீவிரவாதிகளைக் கண்டு பயப்பட மாட்டேன். கல்வீசி தாக்கினால் பயந்து விடுவேன் என எண்ணுகிறார்களா? இதற்கெல்லாம் நான் அஞ்ச மாட்டேன் என்றார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 7 தனி படை அமைத்து சந்திரபாபு நாயுடு மீது கல் வீசி தாக்கியவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.