இஷ்டம் இல்லாத மொழி, ஜாதி, மதங்களை திணித்து கொண்டே இருக்கிறார்கள்: கனிமொழி

பல்வேறு விதமான போராட்டங்களுக்கு பின்பு தான் அனைத்து ஜாதியினரும் கல்வி கற்கும் சூழ்நிலை ஏற்பட்டது. தற்போதும் இஷ்டம் இல்லாத மொழி, ஜாதி, மதங்களை திணித்து கொண்டே இருக்கிறார்கள் என தூத்துக்குடி எம்பியும், திமுகவின் துணை பொதுச்செயலாளருமான கனிமொழி பேசினார்.

வேலூர் மாவட்டம் கணியம்பாடி பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கனிமொழி எம்பி பங்கேற்றார். துறைவாரியாக முதல் இடம் பெற்ற 12 மாணவ மாணவியருக்கு தங்கப் பதக்கங்களை வழங்கினார். மேலும் கல்லூரியில் முதலிடம் பிடித்த 44 மாணவர்கள் உள்பட 554 மாணவ மாணவியருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கனிமொழி எம்பி பேசியதாவது:-

கல்வி என்பது ஒவ்வொரு நாளும் மாறக்கூடிய ஒன்றாக தன்னை புதுப்பித்து கொள்ளும் ஒன்றாக மாறிக்கொண்டிருக்கிறது. முன்பு பெண்கள் படிக்கக் கூடாது என்றும், சில பேர் தான் படிக்க வேண்டும் என்ற நிலைமை இருந்தது. பல்வேறு விதமான போராட்டங்களுக்கு பின்பு தான் எல்லா ஜாதியினரும் ஆண் பெண் என்ற வித்தியாசம் இல்லாமல் படிக்கலாம் என்ற உரிமையை பெற்று இருக்கிறோம். பல சட்ட போராட்டங்களுக்குப் பிறகு மற்றவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறதோ அந்த உரிமை நமக்கும் உள்ளது என்ற நிலைமையை எட்டிப் பிடித்திருக்கிறோம். இதற்கு காரணம் தொடர்ந்து கேள்வி கேட்டது தான். ஏன் என்று கேள்வி கேட்கும் தைரியம் அவர்களுக்கு இருந்தது.

இன்றும் உங்கள் கண் முன்னே பல போராட்டங்கள் இருக்கத்தான் செய்கிறது. தொடர்ந்து நமக்கு இஷ்டம் இல்லாத மொழியையும் ஜாதியையும் , மதத்தையும் இந்த சமூகம் திணித்துக்கொண்டே தான் உள்ளது. உங்கள் எதிர்காலம் உங்கள் கைகளில் இருக்கிறது. எதிர்காலத்தை மாற்ற கூடியவர்களாக நீங்கள் இருக்கிறீர்கள். மாணவர்கள் எதிர்காலத்தில் எதையும் வென்று காட்ட முடியும் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.