உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக டி ஒய் சந்திரசூட் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதிகள் 65 வயது வரை பதவி வகிக்கலாம். உச்சநீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா பதவி வகித்தார். என்.வி.ரமணா, கடந்த ஆகஸ்ட் மாதம் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யுயு லலித் பதவியேற்றார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த யு.யு லலித் நேற்றைய தினம் பணி நிறைவு செய்தார். முன்னதாக கடந்த 2 மாதங்களுக்கு முன்னர், புதிய தலைமை நீதிபதி பெயரை சிபாரிசு செய்யுமாறு தலைமை நீதிபதி யு.யு.லலித்துக்கு மத்திய சட்ட அமைச்சகம் கடிதம் எழுதி இருந்தது. உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட்டை நியமிக்க தலைமை நீதிபதி யு.யு. லலித் பரிந்துரை செய்தார். ஓய்வுபெற உள்ள தலைமை நீதிபதி, தனக்கு அடுத்த இடத்தில் உள்ள மிக மூத்த நீதிபதியை தலைமை நீதிபதி பொறுப்புக்கு சிபாரிசு செய்வது வழக்கம். அந்த அடிப்படையில், யு.யு.லலித்திற்கு அடுத்து மிக மூத்த நீதிபதியான டி.ஒய்.சந்திரசூட், புதிய தலைமை நீதிபதியாக யு.யு லலித் செய்த பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக சந்திரசூட் நியமிக்கப்பட்டார். புதிய தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, இன்று பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்கும் சந்திரசூட், 2 ஆண்டுகள் அதாவது 2024-ம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி வரை இப்பதவியில் தொடருவார். 1959-ம் ஆண்டு பிறந்த டி.ஒய். சந்திரசூட் என்ற தனஞ்செய் சந்திரசூட்டின் தந்தை யஷ்வந்த் விஷ்ண் சந்திரசூட். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நீண்டகாலம் பதவி வகித்தவர். தந்தை அமர்ந்திருந்த அதே நாற்காலில் மகனும் அமருகிறார். இது நீதித்துறை வரலாற்றில் அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் வழக்கறிஞராகப் பணியாற்றிய சந்திரசூட், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 1998-ல் மும்பை (பாம்பே) உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞரானார். 2000-ம் ஆண்டு பாம்பே உயர்நீதிமன்ற நீதிபதி, 2013-ல் அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, பின்னர் 2016-ல் உச்சநீதிமன்ற நீதிபதி என நியமனம் செய்யப்பட்டார். 2021-ம் ஆண்டு முதல் நீதிபதிகளை நியமனம் செய்யும் பரிந்துரை வழங்கக் கூடிய கொலிஜியம் உறுப்பினர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் செல்ல தடை இல்லை என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகளில் சந்திரசூட்டும் ஒருவர். அதேபோல் பெண்கள் கருக்கலைப்பு உரிமையை உறுதி செய்து அண்மையில் தீர்ப்பு வழங்கி இருந்தார். வட இந்தியாவில் மாட்டிறைச்சி வைத்த காரணங்களால் கும்பல் தாக்குதல்கள் அதிகரித்த போது அதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வழிகாட்டுதல்களை தந்தவர் நீதிபதி சந்திரசூட். ஆதாருக்கு எதிரான கருத்துகள், ஒரே பாலினத்தவர் திருமணம் இயற்கைக்கு எதிரானது அல்ல என கருத்துகளை தெரிவித்தவர் 50-வது தலைமை நீதிபதியாகும் டி.ஒய். சந்திரசூட்.