தமிழக அரசு பள்ளி மாணவர்கள் 68 பேரை துபாய் நாட்டுக்கு கல்வி சுற்றுலாவுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று அழைத்துச் செல்கிறார்.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையானது, பள்ளி அளவில் கல்வி மற்றும் இணைச் செயல்பாடுகளான மன்றச் செயல்பாடுகள், நூல் வாசிப்பு, நுண் கலைகள், விளையாட்டு மற்றும் அறிவியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்கள் உலக அளவிலும், தேசிய, மாநில அளவிலும் புகழ்பெற்ற இடங்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர் என அறிவித்திருந்தது. அதேபோல் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இடையே கல்வி இணைச் செயல்பாடுகளை ஊக்குவிக்க பல்வேறு காலகட்டங்களில் இலக்கியம், கவின்கலை, சூழலியல் உள்ளிட்ட மாணவர் மன்றங்கள் மீண்டும் புதுப்பித்து சிறப்பாக செயல்பட வழிவகை செய்யப்படும். மாறி வரும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழில் நுட்ப அறிவு மற்றும் கணினி மொழி மீதான ஆர்வத்தை ஏற்படுத்த கணினி நிரல் மன்றங்கள் மற்றும் எதிர்கால தொழில்நுட்பமான ரொபோட்டிக்ஸ் கற்றுக்கொள்ள ரொபோட்டிக்ஸ் மன்றங்கள் ஏற்படுத்தப்படும். மேலும் இணைய பாதுகாப்பு மற்றும் எத்திக்கல் ஹேக்கிங் பயிற்சி அளிக்கப்பட்டு ஆண்டுதோறும் ஹேக்கத்தான் போட்டிகள் நடத்தப்படும் எனவும் தெரிவித்திருந்தது.
அத்துடன் ஒவ்வொரு மாணவரும் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப வெவ்வேறு மன்றங்களில் பங்கேற்க ஊக்கப்படுத்த வேண்டும். இலக்கிய மன்ற செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் 15 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவர். மாநில அளவில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு கவிமணி விருது வழங்கப்படும். வினாடி-வினா போட்டியில் மாநில அளவில் வெற்றிபெறும் 20 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா செல்லலாம்.மாநில அளவில் பள்ளி புத்தாக்க திட்ட போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு இளம் கண்டுபிடிப்பாளர் விருது வழங்கப்படும். ரொபோட்டிக்ஸ் மன்றங்களில் சிறந்து விளங்கும் 10 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா வாய்ப்பு பெறுவர். எழுத்தாற்றலில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு மாநில அளவில் போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றிபெறும் 15 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர். மேலும், மாநில அளவிலான கலைத் திருவிழாவில் வெற்றிபெறும் 20 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா செல்லலாம் எனவும் பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது.
இதன் ஒரு பகுதியாக சிறந்து விளங்கிய 68 அரசு பள்ளி மாணவர்கள் வெளிநாடு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர். 68 மாணவர்களும் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் துபாய் செல்ல உள்ளனர். ஷார்ஜாவில் நடைபெறும் பன்னாட்டு புத்தக கண்காட்சி, துபாய் பள்ளிகள், ஆய்வகங்கள், சுற்றுலா தலங்களுக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். இது தொடர்பாக அமைச்சர் அன்பி மகேஷ் பொய்யாமொழி டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:-
அரசுப் பள்ளியில் பயிலும் 68 மாணவர்களை ஷார்ஜாவில் நடக்கவுள்ள சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு அழைத்துச்செல்லும் எனது முயற்சிக்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் கடந்த 7-ஆம் தேதி அனுமதி கடிதம் வழங்கினார்கள். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அனுமதியை தொடர்ந்து திருச்சி வருகை தந்த மாணவச் செல்வங்களை வரவேற்றோம். இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.