ஒடிசாவில் பழங்குடியின மக்கள் தயாரிக்கும் நாட்டு சாராயத்தை குடித்ததால் 20-க்கும் மேற்பட்ட யானைகள் போதையில் விடிய விடிய தூங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றை எழுப்ப வனத்துறையினரும், மக்களும் பல்வேறு முயற்சிகளை எடுத்த போதிலும் எழுப்ப முடியவில்லை.
ஒடிசா மாநிலம் கியோன்ஜர் மாவட்டத்தில் ஒரு சிறிய பழங்குடியின கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பழங்குடியின மக்கள், இலுப்பை பூக்களை பயன்படுத்தி நாட்டு சாராயம் காய்ச்சுவது வழக்கம். நம்மூரில் பனை மரத்து கள்ளை போல இந்த இலுப்பை பூ சாராயம் போதை தருவதோடு, உடலுக்கும் பல்வேறு நன்மைகளை தருவதாக கூறப்படுகிறது. இந்த சாராயத்துக்கு ‘மக்குவா’ என்று பெயர். சாராயம் காய்ச்சுவதற்காக அவர்கள் வாரந்தோறும் காட்டுப் பகுதிக்கு உள்ளே சென்று, நன்றாக வளர்ந்து முதிர்ச்சியடைந்த நிலையில் இருக்கும் இலுப்பை பூக்களை அந்த கிராம மக்கள் பறித்து அங்கேயே இதமான வெந்நீரில் அவற்றை நொதிக்க செய்வது வழக்கம். பின்னர் குறிப்பிட்ட நாட்கள் கழித்து அந்த நீரை எடுத்து வந்து, அதிலிருந்து சாராயம் காய்ச்சுவது வழக்கம். அந்த வகையில், சில தினங்களுக்கு முன்பு அவர்கள் இலுப்பை பூக்களை பானைகளில் வெந்நீரை ஊற்றி நொதிக்க செய்திருந்தனர்.
இந்நிலையில், அந்த பானைகளை எடுப்பதற்காக நேற்று அந்த கிராம மக்கள் வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த பானைகள் அனைத்தும் உடைக்கப்பட்டிருந்ததோடு, அவற்றுக்கு அருகே ஆங்காங்கே 24 யானைகள் படுத்து தூங்கிக் கொண்டிருந்தன. பானைகளில் இருந்த இலுப்பை பூ நொதி நீரை யானைகள் நன்றாக குடித்ததால் போதை ஏறி அவை இவ்வாறு படுத்திருப்பது தெரியவந்தது. 9 ஆண் யானைகள், 6 பெண் யானைகள், 9 குட்டிகள் அங்கு போதையில் தூங்கிக் கொண்டிருக்கின்றன. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் அங்கு வந்து மேள, தாளங்களை அடித்து அந்த யானைகளை எழுப்ப முயன்று வருகின்றனர். யானைகள் சிறிது கூட அந்த சத்தத்துக்கு அசைந்து கொடுக்கவில்லை. இதையடுத்து, பட்டாசுகளையும் வனத்துறையினர் வெடித்தனர் வேலைக்கு ஆகவில்லை. இதனால் அந்த யானையை எப்படி எழுப்புவது என தெரியாமல் வனத்துறையினர் விழிப்பிதுங்கி நிற்கின்றனர்.