எனது செல்போன் ஒட்டுக்கேட்கப்படுகிறது: ஆளுநர் தமிழிசை!

தனது செல்போன் ஒட்டுக் கேட்கப்படுவதாக, தெலங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக, குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்பட்டார். இதை அடுத்து, புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருந்த கிரண் பேடி, தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.

தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும், முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்ட்ரீய சமிதி கட்சிக்கும் தொடக்கம் முதலே கருத்து மோதல் நிலவி வருகிறது. மத்திய பாஜக அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவுக்கு, ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுடன் இணக்கமான உறவு இல்லை என்றே கூறப்படுகிறது.

இந்நிலையில் தெலங்கானா மாநிலத்தில் தனது செல் போன் ஒட்டுக் கேட்கப்படுவதாக, அம்மாநில மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார். ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “எனது செல்போன் ஒட்டுக் கேட்கப்படுகிறது. எனது தனியுரிமையில் தலையிடுகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பு, எனது முன்னாள் பாதுகாவலர் துஷார், தீபாவளி வாழ்த்து சொன்னதில் இருந்து செல்போன் ஒட்டுக் கேட்கப்படுவதாக சந்தேகம் உள்ளது. தெலங்கானா மாநிலத்தில் ஆளுநருக்கு உரிய மரியாதை கொடுப்பதில் ஜனநாயகமற்ற சூழல் நிலவுகிறது. தேவை இல்லாமல் ஆளுநர் மாளிகையை குற்றம் சாட்டி பேசுகின்றனர்” என தெரிவித்தார்.