தலைமை நீதிபதி பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்காதது ஏன்: சுப்பிரமணிய சுவாமி

உச்சநீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்காதது தொடர்பாக விளக்கம் தர வேன்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜகவின் சுப்பிரமணிய சுவாமி கூறிஉள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக இருந்தவர் யுயு லலித். அவர் பதவி காலம் முடிவடைந்த நிலையில் 50-வது தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட் பதவியேற்றுக் கொண்டார். டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட்டுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட அறிக்கையில், குடியரசுத் தலைவர் மாளிகை, தர்பார் மண்டபத்தில் இன்று (09.11.2022) காலை 10 மணி அளவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக டாக்டர் நீதிபதி தனன்ஜெய யஷ்வந்த் சந்திரசூட் பதவி ஏற்றுக் கொண்டார். குடியரசுத்தலைவர் முன்னிலையில் அவர் பொறுப்பேற்றார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

புதிய தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு பிரதமர் மோடி தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், இந்தியாவின் தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள டாக்டர் டி ஒய் சந்திரசூடுக்கு வாழ்த்துக்கள். வரவிருக்கும் பதவிக்காலம் அவருக்கு இனிதாக அமைய வாழ்த்துகிறேன் என பிரதமர் மோடி கூறியிருந்தார்.

நாட்டின் தலைமை நீதிபதி பதவியேற்பு நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி பங்கேற்கவில்லை. இது குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பலரும் பல்வேறு கருத்துகளை பதிவிட்டிருந்தனர். பிரதமர் மோடி தமது பதவி காலத்தில் எந்த ஒரு தலைலை நீதிபதியின் பதவி பிரமாண நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருந்தது இல்லை. முதல் முறையாக சந்திரசூட், பதவியேற்பில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை என்பது போன்ற கருத்துகள் இடம் பெற்றிருந்தன.

இந்நிலையில் பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி ஒரு டுவிட்டர் பதிவை போட்டுள்ளார். தலைமை நீதிபதி சந்திரசூட் பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை. இது தொடர்பாக அவர் விளக்கம் தர வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியிருந்தார் சுப்பிரமணியன் சுவாமி.