சென்னை புதுப்பேட்டையை சேர்ந்தவர் நிஜாமுதீன். பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். என்.ஐ.ஏ. அதிகாரிகள் நிஜாமுதீனை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் நடந்த கார் வெடிப்பில் ஜமேஷா முபின் உயிரிழந்தான். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதலில் இறந்த முபினின் அடையாளம் தெரியாததால் அவர் வந்த கார் குறித்து விசாரணை நடத்தினர். கார் பதிவெண்ணை கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், அது சென்னை பதிவெண்ணாக இருந்தது. தொடர்ந்து இந்த கார் யாருடையது, முபின் யாரிடம் இருந்து காரை வாங்கினார்? என விசாரித்தனர். அப்போது இந்த கார் பொள்ளாச்சியை சேர்ந்தவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர். தொடர்ந்து போலீசார் அவரிடம் சென்று விசாரித்தனர். அதற்கு அவர், நான் இந்த காரை விற்று பல வருடங்களாகி விட்டது என்ற தகவலை தெரிவித்தார். மேலும் இந்த கார் 10-க்கும் மேற்பட்டவர்களிடம் கைமாறிய தகவலும் தெரியவந்தது. இதனால் முபினுக்கு காரை கொடுத்தது யார் என்பதை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது.
இந்த நிலையில் கோவையில் வெடித்த கார் சென்னையில் வாங்கப்பட்ட தகவல் போலீசாருக்கு தெரியவந்தது. சென்னை புதுப்பேட்டையை சேர்ந்தவர் நிஜாமுதீன். பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். கோவையில் வெடித்த கார் இவரிடம் இருந்தும் கைமாறி உள்ளது. இதுதொடர்பாக இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை புதுப்பேட்டையில் நிஜாமுதீன் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். பின்னர் நிஜாமுதீனை விசாரணைக்கு அழைத்து சென்றனர். அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் வெடித்த காரை யாரிடம் இருந்து நீங்கள் வாங்கினீர்கள். முபின் உங்களிடம் நேரடியாக தொடர்பு கொண்டு காரை வாங்கினாரா அல்லது வேறு நபர்களின் மூலம் இந்த கார் அவருக்கு விற்கப்பட்டதா? எத்தனை நாட்களுக்கு முன்பு காரை வாங்கினார்? என பல்வேறு கேள்விகளை கேட்டு கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சில முக்கிய தகவல்களை நிஜாமுதீன் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.