அனைத்து மாவட்டங்களிலும் மழை பாதிப்புகளை கணக்கிட அமைச்சர்கள்-அதிகாரிகள் குழுவை அனுப்பிட வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த சில ஆண்டுகளில் பெய்த மழையால் பயிர்களுக்கு மட்டும் தான் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், இப்போது பெய்து வரும் மழை அனைத்து தரப்பினரையும் இழப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா மற்றும் தாளடி பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல இடங்களில் பயிர்கள் அழுகிவிட்டன. சூறைக்காற்றில் படகுகள் மோதி சேதமடைந்ததால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர் மழையால் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு அரசுத் தரப்பில் வாழ்வாதார உதவிகளும், நிவாரணமும் வழங்கப்பட வேண்டும். அதேபோல், சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டால் தான் விவசாயிகளின் நெருக்கடி ஓரளவாவது குறையும். இதைக் கருத்தில் கொண்டு மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்புகளை கணக்கிடுவதற்காக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவை அனுப்ப வேண்டும். அவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் விவசாயிகளுக்கும், பிற பிரிவினருக்கும் உடனடியாக போதிய இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.