இனி குடும்ப தலைவியாக வாழ போகிறேன்: நளினி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளாகச் சிறையில் இருந்த நளினி விடுதலையான பின் செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது நான் இனிமேல் குடும்பத் தலைவியாகவே இருக்கப் போகிறேன் என்று கூறினார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ஆம் ஆண்டு பிரசாரத்திற்காக தமிழ்நாடு வந்திருந்தார். அப்போது, அவர் ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ் என ஏழு பேரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். அவர்கள் கடந்த 30 ஆண்டுகளாக அவர்கள் சிறையில் இருந்தனர். இதற்கிடையே ஏழு பேரையும் விடுவிக்கத் தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது. இந்த விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்காத நிலையில், பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரை விடுதலை செய்தது. இதேபோல தங்களையும் விடுவிக்க வேண்டும் என்று நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நளினி இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் விடுதலை செய்ய உத்தரவிட்டது. அதன்படி இன்று நளினி உள்ளிட்ட 6 பேரும் இன்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின் சிறையில் இருந்து விடுதலையான நளினி அதன் பின்னர் செய்தியாளரைச் சந்தித்தார். அவர் கூறியதாவது:-

32 ஆண்டுகளாக எனக்கு உறுதுணையாக இருந்த தமிழக மக்களுக்கு நன்றி. இத்தனை காலமாக எங்களுக்கு உதவிய ஒவ்வொரு நபருக்கும் மனமார்ந்த நன்றிகள். அதேபோல மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது விடுதலைக்காகக் குரல் கொடுத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. நான் இனிமேல் குடும்பத் தலைவியாகவே இருக்கப் போகிறேன். இனிமேல் எனது குடும்பம், எனது கணவர், எனது குழந்தைக்காகவே வாழப் போகிறேன். இவர்களுக்கானது என்னுடைய வாழ்க்கை. சென்னையில் நாளை நான் செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளேன். என்னுடன் உச்ச நீதிமன்றத்தில் எனக்காக ஆஜரான வழக்கறிஞரும் செய்தியாளர்களைச் சந்திப்பார். அப்போது கூடுதல் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நளினியின் சகோதரர் பாக்கியநாதன், “நளினியும் சரி எங்கள் குடும்பத்தினரும் சரி ரொம்பவே மகிழ்ச்சியாக உள்ளோம். அவர் இனிமேல் குடும்பத்துடன் சாதாரண ஒரு வாழ்க்கை வாழப் போகிறார். முதல்வரிடம் நேரில் நன்றி தெரிவிக்க அவரிடம் நேரம் கேட்க முயன்று வருகிறோம்” என்று அவர் தெரிவித்தார்.

நளினியின் வழக்குரைஞர் புகழேந்தி பேசுகையில், நளினி இனி சுதந்திர பெண். அவர் தனது எதிர்காலத்தை தீர்மானிக்கலாம் என்று கூறினார். மேலும், அவர் சென்னையிலேயே இருப்பாரா அல்லது லண்டனில் தனது மகளுடன் இருக்க விரும்புவாரா என்று கேட்டதற்கு, அது பற்றி அவர் இன்னமும் முடிவெடுக்கவில்லை என்று தெரிவித்தார். முருகனின் நிலை குறித்துக் கேட்டதற்கு, விடுதலையாகும் 4 இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நளினியும் அவரது கணவர் முருகனும் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டுள்ள போதிலும், அவர்களால் இரண்டு வார்த்தை கூட நேரில் பேசிக் கொள்ள முடியவில்லை. முருகன், சாந்தன் உள்ளிட்ட 4 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களைத் திருச்சியில் உள்ள இலங்கைத் தமிழர் சிறப்பு முகாமில் தங்க வைக்க போலீசார் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.