பிரதமர் நரேந்திர மோடி நேற்று தமிழகம் வந்து சென்ற நிலையில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்து இருக்கிறார்.
திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க நேற்று பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை தந்தார். இந்த விழாவில் தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல இசையமைப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சி முடிந்த பிறகு அவர் மீண்டும் மதுரையிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருகை தந்து இருக்கிறார். நள்ளிரவு சென்னை விமான நிலையம் வந்த அமித்ஷாவுக்கு தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் நேரில் சென்று உற்சாக வரவேற்பு வழங்கினார்கள்.
தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அமித்ஷா கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுப்பதற்காக தங்கி உள்ளார். இதனைத் தொடர்ந்து காலை 11 மணியளவில் சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ள தனியார் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ள உள்ளார். அதன் பின்னர் மாலை 3 மணியளவில் சென்னை தியாகராயர் நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாயத்துக்கு அமித்ஷா செல்கிறார். கமலாலயத்தில் தமிழ்நாடு பாஜக மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கும் அமித்ஷா, மாலை 4 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்ல உள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையை ஒட்டி சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
கடந்த ஜூலை மாதம் தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் ஆபரேசன் சவுத் இந்தியா திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா முன்வைத்தார். அதன் தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொண்டு வரும் அக்கட்சி, பல்வேறு நடைமுறை செயல்பாடுகளை மாற்றியும் இருக்கிறது. தென்மாநிலங்களில் பாஜகவுக்கு அதிக எதிர்ப்பு இருக்கும் தமிழ்நாட்டிற்கு குறுகிய கால இடைவெளியில் பிரதமர் நரேந்திர மோடி 2 முறை வந்து சென்று இருக்கிறார். பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும் அண்மையில் சிவகங்கை மாவட்டத்துக்கு வருகை தந்தார். இதேபோல் கேரளா, தெலுங்கானா மாநிலங்களுக்கு அமித்ஷா அண்மையில் சென்றார். இந்த நிலையில் இன்று தமிழ்நாடு வந்துள்ள அமித்ஷா கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவது குறிப்பிடத்தக்கது.