அடாத மழையிலும் விடாது பணியாற்றும் அரசு மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்களுக்கு மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை கரூர் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் நடைபெற்ற விழாவில் புதிய 50,000 விவசாய மின் இணைப்புகளின் ஆணைகளை வழங்கியும் கரூரில் 20 ஆயிரம் பயனாளிகளுக்கு இலவச மின் இணைப்புகளை வழங்கியும் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து மாலையில் கரூரில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமம் சென்றார் முதல்வர் ஸ்டாலின். காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடியுடன் பங்கேற்றார் ஸ்டாலின். கரூர், திண்டுக்கல் பயணங்களை முடித்துக் கொண்டு இரவே சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்.
சென்னை திரும்பியதும் வேளச்சேரி பகுதியில் மழைநீரை வெளியேற்றும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். சென்னையில் மழை பெய்தால் வேளச்சேரியின் பெரும்பகுதி வெள்ள நீரால் சூழப்பட்டும் வாகனங்கள் மேம்பாலத்தில் நிறுத்தப்படுவதும்தான் காட்சியாக இருந்து வந்தது. ஆனால் தற்போது கொட்டும் மழையில் வேளச்சேரியில் நீர் தேங்காமல் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக தமது சமூக வலைதளப் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவு செய்துள்ளதாவது:-
மழை வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில் மக்களைக் காக்கும் மகத்தான பணியில் தங்களை ஒப்படைத்துக் கொண்டு இருப்பவர்கள் அரசு மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்களே! சென்னையில் தண்ணீர் தேங்கவில்லை; தேங்கினாலும் உடனே வெளியேற்றப்பட்டு விடுகிறது என்று பொதுமக்கள் அரசை வாழ்த்துகிறார்கள் என்றால் அதற்கு முக்கியக் காரணம் இப்பணியாளர்களின் இடைவிடாத பணியே! ஊழியர்களுக்கு நன்றி அடாத மழையிலும் விடாது பணியாற்றும் அந்த ஊழியர்களுக்கு மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். திண்டுக்கல் நிகழ்ச்சியை முடித்துவிட்டு மதுரையில் இருந்து விமானத்தில் சென்னை வந்த நான், வேளச்சேரி கல்கி நகர் பகுதியில் மழைநீர் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களை நேரில் சந்தித்து பாராட்டுத் தெரிவித்தேன். இவர்கள் மகத்தான பணி அனைவராலும் பாராட்டத்தக்கது! இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.