தேனி எம்.பி. ரவீந்திரநாத் வனத்துறை விசாரணைக்கு ஆஜர்!

தனது தோட்டத்தில் சிறுத்தை உயிரிழந்த விவகாரம் தொடர்பான வனத்துறையின் விசாரணைக்கு தேனி எம்.பி., ரவீந்திரநாத், வனச்சரகர் அலுவலகத்தில் இன்று ஆஜரானார்.

தேனி மாவட்டம், கோம்பைபுதூரில் கடந்த செப். 28-ஆம் தேதி தனியாா் தோட்டத்தில் கம்பி வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்தது. இந்த வழக்கில், தோட்டத்தில் ஆட்டுக் கிடை அமைத்திருந்த அலெக்ஸ்பாண்டியன், தோட்ட மேலாளா்கள் தங்கவேல், ராஜவேல் ஆகியோரை வனத் துறையினா் கைது செய்தனா். இந்த விவகாரத்தில் தனியாா் தோட்டத்தின் கூட்டு பட்டாதாரா்களான பெரியகுளத்தைச் சோ்ந்த தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ப.ரவீந்திரநாத், அதே ஊரைச் சோ்ந்த தியாகராஜன், காளீஸ்வரன் ஆகியோரை தேனி வனச் சரக அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு வனத் துறையினா் நோட்டீஸ் அனுப்பியிருந்தனா். இதில், வனத் துறையினா் முன் விசாரணைக்கு ஆஜரான தியாகராஜன், காளீஸ்வரன் ஆகியோா், தங்களது நிலத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு ப.ரவீந்திரநாத்துக்கு விற்பனை செய்துவிட்டதாக வாக்குமூலம் அளித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இவ்விவகாரத்தில் வனத்துறையின் விசாரணைக்கு தேனி எம்.பி., ரவீந்திரநாத், வனச்சரகர் அலுவலகத்தில் இன்று ஆஜரானார். 2 முறை சம்மன் அனுப்பிய நிலையில், மாவட்ட உதவி வன பாதுகாவலர் முன்னிலையில் அவர் ஆஜராகி விளக்களித்தார்.