6 பேர் விடுதலையில் திமுக துரும்பையும் கிள்ளிப்போடல: ஜெயக்குமார்

6 பேர் விடுதலை விவகாரத்தில் திமுக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போட்டது இல்லை, ஆனால் தற்போது உரிமை கொண்டாடுகிறார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருந்த 6 பேரை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், தீர்ப்பை வரவேற்ற முதல்வர் ஸ்டாலின், திமுகவின் சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றார். அதனை விமர்சித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஊர்ல கல்யாணம் மார்ல சந்தனம்’ என்பதுபோல எங்கே எது நடந்தாலும், அதற்கு நாங்கள்தான் காரணம் என்பது போல பேசுவது திமுக வழக்கம் என விமர்சித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

6 பேர் விடுதலை விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதாயம் தேடுகிறார். திமுக நினைத்திருந்தால் 7 பேரையும் முன்பே விடுவித்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை. 7 பேர் விடுதலைக்காக திமுக ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போட்டது கிடையாது. திமுக இந்த நேரத்தில், ‘ஊர்ல கல்யாணம் மார்ல சந்தனம்’ என்பதுபோல எங்கே எது நடந்தாலும், அதற்கு நாங்கள்தான் காரணம் என்பது மாதிரி சந்தனத்தைப் பூசிக்கொள்கிறது. இந்த மாதிரி ஒரு கில்லாடித்தனத்தைக் கையில் வைத்துக்கொண்டு, ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கி மக்களிடையே தவறான தகவலைப் பரப்பி அதன் மூலம் ஆதாயத்தைத் தேடுகிறார்கள். எப்போதும் வாய்மைதான் வெல்லுமே ஒழிய பொய்மை வென்றதாகச் சரித்திரம் கிடையாது.

7 பேர் விடுதலைக்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர் ஜெயலலிதா. அதிமுகவின் தொடர் நடவடிக்கையால் தான் 7 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். முதல்வர் ஸ்டாலினின் தந்தை கருணாநிதி அன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில், நளினியை தவிர மீதிப் பேரின் தண்டனையைக் குறைக்கக் கூடாது என தன் கையாலேயே எழுதியிருக்கிறார். இது கோப்புகளில் இருக்கிறது. அன்றைக்கு இந்த நிலை எடுத்து, இன்றைக்கு உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தவுடன் நாங்கள்தான் காரணம் என்று மார்தட்டிக் கொள்கிறார்கள். எடுத்த நிலை மாறாமல் நேற்று ஒன்று, இன்றைக்கு ஒன்று, நாளைக்கு ஒன்று என நிமிஷத்துக்கு நிமிஷம் வேடங்களை மாற்றிக்கொண்டு, அதன் மூலம் மக்களை ஏமாற்றுகிற செயலில் தான் திமுக ஈடுபடுகிறது. எடுத்த நிலைப்பாட்டில் இருந்து மாறாமல் எப்போதும் உறுதியாக இருக்கும் ஒரே இயக்கம் அதிமுக தான். இவ்வாறு அவர் கூறினார்.