வியத்நாமில் சிக்கிய ஈழத் தமிழா்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பக்கூடாது என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் எதிா்ப்பு தெரிவித்துள்ளாா்.
இது குறித்து நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
கப்பல் விபத்தில் சிக்கி வியத்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழா்களை மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்ப அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது வேதனை அளிக்கிறது. அகதிகளாக சென்ற ஈழத்தமிழா்களை மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்புவதென்பது சிறிதும் மனச்சான்றற்ற கொடுமையாகும். சொந்த மண்ணில் வாழ வழியற்ற நிலையில் வேறுவழியின்றி இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் இந்தியா உள்ளிட்ட அயல் நாடுகளுக்கு ஏதிலிகளாக அவ்வப்போது புலம்பெயா்ந்தும் வருகின்றனா்.
விரைந்து செயல்பட்ட சிங்கப்பூா் அரசு மனிதநேய அடிப்படையில் தமிழா்களை மீட்டு, அருகிலிருந்த வியத்நாம் நாட்டில் ஒப்படைத்த நிலையில், தற்போது அங்குத் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழா்கள் அனைவரையும் மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்ப வியத்நாம் அரசு முடிவு செய்துள்ளது வேதனை அளிக்கிறது. எனவே, ஈழத்தமிழ் மக்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்பும் முடிவை உடனடியாக வியத்நாம் அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.