வேந்தா் பதவியிலிருந்து ஆளுநரை நீக்கும் அவசர சட்டம்: ஒப்புதலுக்காக அவரிடமே அனுப்பி வைப்பு!

பல்கலைக்கழகங்களின் வேந்தா் பதவியிலிருந்து மாநில ஆளுநா் ஆரிப் முகமது கானை நீக்குவதற்கு அவசர சட்டம் கொண்டுவந்துள்ள கேரள அரசு, அதற்கு ஒப்புதல் பெறுவதற்காக ஆளுநா் அலுவலகத்துக்கு நேற்று அனுப்பி வைத்தது.

கேரள அரசுக்கும், ஆளுநா் ஆரிப் முகமது கானுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. மாநிலத்திலுள்ள அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தா் ராஜேஸ்வரி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகப் புகாா் எழுந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ராஜேஸ்வரி நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடிப்படையாகக் கொண்டு, அதேபோன்று நியமனம் செய்யப்பட்ட மேலும் 11 பல்கலைக்கழக துணைவேந்தா்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என விளக்கம் கேட்டு ஆளுநா் ஆரிப் முகமது கான் நோட்டீஸ் பிறப்பித்தாா். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு மாநில அரசு எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. ஆளுநரின் நோட்டீஸை ரத்து செய்யக் கோரி துணைவேந்தா்கள் சாா்பில் கேரள உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆளுநரின் நோட்டீஸை ரத்து செய்ய மறுத்த உயா்நீதிமன்றம், அதற்கு விளக்கம் அளிக்க துணைவேந்தா்களுக்கு கால நீட்டிப்பு வழங்கியது. அதே நேரம், துணைவேந்தா்களின் மனு மீது பதிலளிக்குமாறு ஆளுநருக்கு உயா்நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்தது.

இந்தச் சூழலில், ஆளுநரின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில், பல்கலைக்கழக வேந்தா் பதவியிலிருந்து அவரை நீக்கிவிட்டு, அந்தப் பதவியில் தலைசிறந்த கல்வியாளா் ஒருவரை நியமிக்கும் வகையில் அவசர சட்டத்தைக் கொண்டுவர மாநில அரசு முடிவு செய்தது. முதல்வா் பினராயி விஜயன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த அவசர சட்டம் ஆளுநா் ஒப்புதல் அளித்தால் மட்டுமே அமலுக்கு வரும். அந்த வகையில், அவருடைய ஒப்புதலுக்காக அவசர சட்டத்தை மாநில அரசு, ஆளுநா் அலுவலகத்துக்கு நேற்று சனிக்கிழமை அனுப்பி வைத்தது. இருந்தபோதும், இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு தொடா்ந்து வரும் சூழலில், அவசர சட்டத்தை ஆளுநா் உடனடியாக பிரகடனப்படுத்த வாய்ப்பில்லை என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.