முருகன் உள்ளிட்டோரை சிறப்பு முகாமில் வைத்து வதைப்பது கடும் கண்டனத்திற்குரியது: சீமான்!

31 ஆண்டுகளுக்குப் பின்னர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் , முருகன் ஆகிய 4 பேரையும் முதல் நாளே திருச்சி சிறப்பு முகாமில் வைத்து வதைப்பது கண்டனத்திற்குரியது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய 6 பேரும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் இருந்து நேற்று மாலை விடுதலை செய்யப்பட்டனர். இவர்களில் முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய 4 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால் திருச்சி புலம்பெயர்ந்தோர் முகாமுக்கு மாற்றப்பட்டனர். திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள நால்வரையும், அவர்கள் விரும்பும் நாட்டிற்கு செல்ல அனுமதிக்கவோ, விரும்பினால் இலங்கையராக பதிவுசெய்துகொண்டு தமிழ்நாட்டிலேயே வசிக்க அனுமதிக்கவோ அரசிடம் கோரப்போவதாக அவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர். இதில், முருகன், ஜெயக்குமார் ஆகியோர் இந்தியர்களைத் திருமணம் செய்துள்ளதால், அவர்கள் தங்களை இங்கேயே வசிக்க அனுமதிக்கக் கோரலாம் எனக் கூறப்படுகிறது.

சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டு திருச்சி அகதிகள் முமாமுக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு அவர்களுக்கு எந்தவித அறையும் ஒதுக்கீடு செய்யாமல், விடிய விடிய காத்திருக்க வைத்ததாக கூறப்படுகிறது. 31 ஆண்டு சிறை வாசத்துக்குப் பிறகு விடுதலையான முதல் நாளே மீண்டும் அடைத்து வைத்து ஓய்வெடுக்க விடாமல் வைத்திருந்தததற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள சீமான், ’31 ஆண்டுகளுக்கும் மேலான கொடுஞ்சிறைவாசத்துக்குப் பிறகு, விடுவிக்கப்பட்ட தம்பி இராபர்ட் பயஸ், அண்ணன் ஜெயக்குமார், தம்பி சாந்தன், தம்பி முருகன் ஆகிய நால்வரையும் திருச்சி, சிறப்பு முகாமுக்கு அழைத்துச்சென்று 15 மணி நேரத்துக்கும் மேலாக அவர்களுக்கு எந்தவித அறையும் ஒதுக்கீடு செய்யாது, ஓய்வெடுக்கவும் விடாது விடிய விடிய நாற்காலியிலேயே அமர வைத்திருந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது. நீண்ட நெடுஞ்சிறை வாசத்துக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட அவர்களை சிறப்பு முகாம் எனும் சித்திரவதைக் கூடத்தில் அடைக்காமல் மாற்றிடத்தில் தங்க அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி வரும் நிலையில், முதல் நாளே சிறப்பு முகாமில் வைத்து வதைப்பது கடும் கண்டனத்திற்குரியது’ எனத் தெரிவித்துள்ளார்.