முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பாஜக எம்.எல்.ஏக்கள்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பாஜக எம்.எல்.ஏக்கள் நயினார் நாகேந்திரன், காந்தி, சரஸ்வதி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்துப் பேசினர். தங்களது தொகுதி சார்ந்த கோரிக்கைகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மனு அளித்துள்ளதாக பாஜக எம்.எல்.ஏக்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், காந்தி, சரஸ்வதி மற்றும் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்தனர். பாஜக எம்.எல்.ஏக்கள் தங்களுடைய தொகுதிப் பிரச்சனைகள் தொடர்பாக முதல்வரிடம் பேசி, கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது பேசிய நயினார் நாகேந்திரன், நெல்லையப்பர் கோவிலுக்கு அண்டர் கிரவுண்ட் கேபிள் அமைத்துத் தர வேண்டும், தேர் வசதி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகத் தெரிவித்தார்.

மொடக்குறிச்சி பாஜக எம்.எல்.ஏ சரஸ்வதி, தமது தொகுதியில் கேந்திர வித்யாலயா பள்ளி கொண்டுவர மத்திய அரசு அனுமதி கொடுத்திருப்பதாகவும் தமிழக அரசு இடமளிக்க ஒப்புதல் தர வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மண்டைக்காடு கலவரம் குறித்த வேணுகோபால் கமிஷன் பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேசினோம். வேணு கோபால் கமிஷன் அறிக்கையை அரசாணையாக கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினோம். மதக் கலவரங்களை தடுக்கக்கூடிய வகையில் எதிர்காலத்தில், மத வழிபாட்டுத் தலம் கட்ட வேண்டுமானால் அரசிடம் முறைப்படி அனுமதி பெற்றுத் தான் கட்ட வேண்டும் என்கிற ஒரு நிலையை உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டோம் எனத் தெரிவித்தார்.

மேலும், அரசு நிலங்கள் மற்றும் அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலங்கள் ஆகியவை தவறாக பயன்படுத்தப்படுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவும் முதலமைச்சர் ஸ்டாலினிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், முதலமைச்சர் ஸ்டாலின், அனைத்து விஷயங்களையும் கவனமாக கேட்டுக்கொண்டார் என்றும் நிச்சயம் இந்த விவகாரங்களில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் என்றும் பொன்னார் தெரிவித்தார்.