திராவிடம் என்பதை இனம் என ஆங்கிலேயர்கள் குறிப்பிட்டது தவறு: கவர்னர் ரவி

திராவிடம் என்பதை இனம் என ஆங்கிலேயர்கள் குறிப்பிட்டது தவறு என சென்னையில் நடந்த பழங்குடியினர் பெருமை தின விழாவில் கவிர்னர் ரவி பேசினார்.

சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் பிர்சா முண்டா நினைவாக நடக்கும் பழங்குடியினர் பெருமை தின விழா இன்று(நவ.,16) கொண்டாடப்பட்டது. பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கவர்னர் ரவி பேசியவதாவது:-

பழங்குடியின தலைவர்கள் தியாகங்களை நினைவு கூர வேண்டும். பழங்குடியின மக்களுக்கு இருக்கும் வேறுபாடுகளை உடைத்தெறிய வேண்டும். பழங்குடியின மக்களுக்குள் செயற்கைத்தனமான வகைப்படுத்தலை பிரிட்டிஷ் அரசாங்கம் செய்தது. திராவிடம் என்பதை இனம் என ஆங்கிலேயர் குறிப்பிட்டது தவறு. விந்திய மலைக்கு தெற்கே இருப்பது பஞ்ச திராவிட பகுதி, வடபகுதி பஞ்ச ஆரிய பகுதி என்பதே பண்டைய வரலாறு. வடபகுதியில் இருப்பவர் தெற்கே வருவதும், தெற்கில் இருப்பவர் வடபகுதிக்கு செல்வதும் நீண்ட காலமாக இருந்து வந்தது. அதேபோல் ஆங்கிலேயர் ஆட்சிக்கு பின்னரும் திராவிட இனம் என்று பின்பற்றி வருவது தவறு.

பழங்குடியின மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் இரு விதமான இடஒதுக்கீட்டை வழங்குகின்றன. மாநிலத்தை பொறுத்த வரை மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. 8 கோடி மக்கள் இருக்கும் தமிழ்நாட்டில் பழங்குடியினர் 8 லட்சம் பேர் இருக்கின்றனர். அவர்களுக்கு மாநில அரசு 1% இட ஒதுக்கீடு வழங்குகிறது. இது குறைவாக உள்ளது. இதனை கருத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நீட் தேர்வு குறித்தும், அதற்கு தயாராக வேண்டிய முறைகள் குறித்தும் பள்ளி மாணவர்களுடன் உரையாடினார்கள். நீட் விலக்கு கோரி தமிழக அரசு முயற்சி செய்து வரும் நிலையில் கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் நீட் தேர்வை எதிர்கொள்வது குறித்த அனுபவங்களை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார்.