அதிமுக திட்டங்களை முடக்கும் திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி பகுதியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஏழைகளுக்காக அ.தி.மு.க., அரசு கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க., அரசு படிப்படியாக நிறுத்தி வருகிறது என எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வினால் கடந்த வெள்ளிக்கிழமை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அதீத கனமழை பெய்தது. 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 44 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்ததால் சீர்காழி வெள்ளக்காடானது. சீர்காழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளையும், 30 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களையும் வெள்ளம் சூழ்ந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்து மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிச் சென்றார். மேலும் சீர்காழி, தரங்கம்பாடி வட்டத்தில் குடும்ப அட்டைதாரருக்கு ரூ. 1000 நிவாரண உதவியாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இந்நிலையில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி பகுதிக்கு தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி. பழனிசாமி வருகை புரிந்தார். சீர்காழி அடுத்த கொள்ளிடம் வட்டாரத்திற்கு உட்பட்ட நல்லூர், அகர வட்டாரம், வேட்டங்குடி ஆகிய பகுதிகளில் மழை நீரில் மூழ்கியுள்ள விவசாய நிலங்களை பார்வையிட்டார். தண்ணீரில் மூழ்கியுள்ள பயிர்களை பிடுங்கி விவசாயிகள் எடப்பாடி பழனிசாமியிடம் காண்பித்து பாதிப்பு குறித்து கூறினர். தொடர்ந்து சீர்காழி அருகே உப்பநாற்றுக்கரை உடைந்து சூரக்காடு கீழத்தெரு பகுதியில் 350 வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு சட்டநாதபுரத்தில் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து ஆறுதல் கூறினார். அதன்பிறகு மழை வெள்ள பாதிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி நிவாரண உதவிகள் வழங்கினார்.

பின்னர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:-

சேவை செய்யவே அதிமுக வடகிழக்கு பருவமழையின் ஆரம்ப கட்டத்திலேயே கடலூர் மாவட்டத்தில் பல இடங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வேண்டும் என்று நேரடியாக வந்துள்ளேன். அதிமுகவை பொறுத்தமட்டில் ஆளும் கட்சியாக இருந்தபோதும் எதிர்க்கட்சியாக இருந்தபோதும் சேவை செய்யும் ஒரு இயக்கமாக உள்ளது. ஏனென்றால் இந்த இயக்கம் ஏழைக்காக தான் துவங்கப்பட்டது.

டெல்டா மாவட்டத்தை பொறுத்தமட்டில் கடலூர் மாவட்டம் ஒவ்வொரு பருவமழை காலத்திலும் வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறது. இதனை தடுக்க எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்திலும் நான் முதல்வராக இருந்தபோதும் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தோம். பல்வேறு வடிகால் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது மழைநீர், வெள்ள நீர் வடியும் சூழலை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். குமாரமங்கலத்தில் ரூ.500 கோடியில் கதவணை கட்டி கொடுத்துள்ளோம். விவசாயிகளுக்காக கடன் தள்ளுபடி செய்தோம். மக்களுக்கான திட்டங்களை அதிமுக தொடர்ந்து செய்து வந்தது. ஆனால் தற்போதைய திமுக அரசு அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களை முடக்கி வருகிறது.

தமிழ்நாட்டில் ஏழை மக்களுக்காக அவர்கள் இருக்கும் இடத்திலேயே சிகிச்சை வழங்குவதற்காக அம்மா மினி கிளினிக் திட்டத்தை கொண்டு வந்தோம். மாநிலத்தில் 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதனை திமுக அரசால் பொறுத்து கொள்ள முடியவில்லை. இப்போது 708 இடங்களில் நகர்ப்புற மருந்தகங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிமுக திட்டத்தை பெயர் மாற்றி திமுக அரசு செயல்படுத்தும் வேளையில் கிராமங்களை ஒதுக்கிவிட்டனர். கிராமப்புறங்களில் உள்ள அம்மா மினி கிளினிக் திட்டத்தை ஸ்டாலின் அரசு முடக்கி வருகிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் நீட் தேர்வுக்காக 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கொண்டு வந்தோம். இப்போது ஏழை மாணவர்கள் டாக்டர் படிப்பை படித்து வருகின்றனர். நடவு செய்யும் கூலி தொழிலாளியின் மகன், மகள்கள் இன்றைக்கு எம்பிபிஎஸ், பல் மருத்துவ படிப்பை படித்து வருகின்றனர். இந்த ஆண்டு 575 பேர் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் மூலம் தேர்வு செய்யப்பட்டு ஒரு பைசா செலவின்றி படிக்க அதிமுக வாய்ப்பு வழங்கி உள்ளது.

அதிமுக அரசு ஏழைகளுக்காக நிறைய திட்டங்கள் கொடுத்தது. இதனை படிப்படியாக முடக்கி வருகிறது. மாணவர்களுக்கு சீருடை, புத்தகம், சைக்கிள், காலணி அனைத்தும் அதிமுக சார்பில் வழங்கப்பட்டது. மடிக்கணினி திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆண்டுக்கு 5 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. இந்த திட்டத்தை நிறுத்திவிட்டனர். மேலும் திருமண உதவித்திட்டம், தாலிக்கு தங்கம் திட்டத்தை கைவிட்டு விட்டனர். தற்போது ஒரு பவுன் ரூ.38 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை விற்பனையாகும் நிலையில் ஏழை பெண்களுக்காக துவங்கிய திட்டத்தை திமுக அரசு முடக்கி உள்ளது. தற்போது தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. பொதுமக்களுடன் எப்போதும் அதிமுக துணை நின்று சேவை செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.