கால்பந்து வீராங்கனை பிரியா வீட்டிற்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்!

தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த இளம் கால்பந்து வீராங்கனை பிரியா மூட்டு வலி காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து நடந்த அறுவை சிகிச்சையில் ஒரு காலை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக மருத்துவர்கள் சரியான முறையில் கட்டு போடவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் கால் வீக்கம் ஏற்பட்டது. உடனே மேல்சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் காலை திடீரென உயிரிழந்தார். இது ஒட்டுமொத்த தமிழகத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தகவலறிந்து உடனடியாக விசாரணைக் குழு ஒன்றை அமைத்தது தமிழக அரசு. சம்பவம் தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உரிய விளக்கம் கொடுத்தார்.

இதற்கிடையில் பிரியாவின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள், தோழிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சமாதானப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு உடலை பெற்றுக் கொண்டனர். பிரியாவின் இறுதிச் சடங்கில் ஏராளமானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். இதற்கிடையில் சம்பந்தப்பட்ட இரண்டு மருத்துவர்களும் பணியிடை நீக்கம், பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்கள் மீது சட்டப்பூர்வ மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. பிரியாவின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வியாசர்பாடியில் உள்ள பிரியாவின் வீட்டிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவம்பர் 17) காலை நேரில் சென்றார். அப்போது, பிரியாவின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். மேலும் அரசு பணிக்கான உத்தரவு, 10 லட்ச ரூபாய்க்கான காசோலை, அரசு சார்பில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான ஆணை ஆகியவற்றை பிரியாவின் பெற்றோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அப்போது அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

இந்த நிலையில், பிரியாவின் மரணம் குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கால்பந்தாட்ட வீராங்கனை ப்ரியாவின் மரணம் தாங்க முடியாத துயரம்! ஏற்றமிகு உயரத்தை எட்டவிருந்த திறமைசாலியான அவரது இழப்பு, அவரது குடும்பத்துக்கும் – நம் மாநில விளையாட்டுத்துறைக்கும் ஏற்பட்ட மாபெரும் இழப்பு! அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அரசு அனைத்து வழிகளிலும் உதவியாய் நிற்கும். இவை அனைத்தும் பிரியாவின் உயிர்க்கு ஈடாகாது என்று பதிவிட்டுள்ளார்.