கவர்னர் பதவி என்பது ரப்பர் ஸ்டாம்பு பதவி இல்லை: ஆர்.என்.ரவி

ஆளுநர் பதவி என்பது ரப்பர் ஸ்டாம்பு அல்ல; ஆளுநர் ஒரு மாநில அரசின் மசோதாவை தடுக்க முடியும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

திருவனந்தபுரத்தில் உள்ள சட்டசபை வளாகத்தில் லோக் அயுக்தா தினம் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

லோக் அயுக்தா சட்டம் அரசுக்கும், அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான ஒன்றாகும். இந்த சட்டத்தை யாரும் பலவீனப்படுத்தக்கூடாது. எந்த வகையிலும் அதற்கான முயற்சியிலும் ஈடுபடக்கூடாது. இதனை மீறி லோக் அயுக்தா சட்டத்தை யாராவது பலவீனப்படுத்த முயன்றால் அதனை தடுக்க அந்தந்த மாநில கவர்னர்கள் தேவையான முயற்சிகளை மேற்கொள்வார்கள். கவர்னர் பதவி என்பது ரப்பர் ஸ்டாம்பு பதவி இல்லை. மசோதாக்களில் கவர்னர்கள் கையெழுத்து போடாமல் இருக்க தகுந்த காரணங்கள் இருக்கும். இதனை சுப்ரீம் கோர்ட்டும் தெளிவு படுத்தி உள்ளது. கவர்னருக்கு அதிகாரம் உண்டா? அவர்கள் ரப்பர் ஸ்டாம்புகளா? என தீர்மானிக்கும் அதிகாரம் சுப்ரீம் கோர்ட்டுக்கு மட்டுமே உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னரே அரசியல் அமைப்பில் கவர்னர்களின் அதிகாரம் என்ன என்பதை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்து உள்ளது.

அரசியலமைப்பு விதி 200-ன் கீழ், மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததாகவோ அல்லது மசோதாவை தடுத்து நிறுத்துவதாகவோ அல்லது குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக வைத்திருப்பதாகவோ ஆளுநர் அறிவிக்கலாம். அது அரசியலமைப்பு உட்பட்டது என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது. ஆளுநர் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று அனைத்து வகையான குரல்களும் ஒலிக்கப்படுகின்றன. அது முக்கியமில்லை. முக்கியமானது எதுவென்றால், அது இந்திய அரசியலமைப்பு. உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றங்களும் அரசியலமைப்பை வெளிப்படுத்தும் அமைப்புகள்.

உண்மையான ஜனநாயகத்தை நிலைநாட்ட லோக் அயுக்தா போன்ற அமைப்புகள் தேவை. நீதித்துறை, லோக் அயுக்தா போன்ற அமைப்புகள் மீது மக்கள் இப்போது நம்பிக்கை வைத்து உள்ளனர். அந்த நம்பிக்கைக்கு பாதகம் ஏற்படாமல் பாதுகாப்பது நமது கடமை. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விழாவில் நீதிபதி சிரியக் தாமஸ், கேரள சட்ட மந்திரி ராஜீவ், எதிர்கட்சித்தலைவர் வி.டி.சதீசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கேரளாவில் லோக் அயுக்தா சட்டதிருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. ஆனால் அதற்கு கவர்னர் கையெழுத்து போடவில்லை. இந்த நிலையில் மசோதாவுக்கு ஆதரவாக மந்திரி ராஜீவ் பேசினார். அதனை விமர்சிக்கும் வகையில் எதிர்கட்சி தலைவர் வி.டி.சதீசன் பேசியது குறிப்பிடத்தக்கது.