தென் மாநிலங்கள் மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்டிருந்தாலும் நமக்கு அதனால் எவ்வித தீங்கும் நேரவில்லை. மாறாக வடக்கு தான் நமக்கு எப்போதும் தீங்கை விளைவிக்கிறது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி முன்னெடுப்பில் திசை புத்தக நிலையம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் என கருத்தியல் தலைவர்களைக் கண்டடைவதற்கான நூல்கள் திசை புத்தக நிலையத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டனர். திருமுருகன் காந்தி இந்த புத்தக நிலைய துவக்க நிகழ்ச்சியில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியதாவது:-
ஈழப் போரில் லட்சகணக்கான தமிழர்கள் கடற்கரையில் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களுக்காக சென்னை மெரினா கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தியவர் திருமுருகன் காந்தி. இளைஞர்களுக்கு வழிகாட்டக்கூடிய தகுதி திருமுருகனுக்கு உள்ளது. அரசியலில் ஈடுபாடு உள்ள தமிழக இளைஞர்கள் இங்கு உள்ள திராவிட கட்சிகளில் சேர விருப்பமில்லை எனில் அவர்கள் திருமுருகன் காந்தியை பின்பற்றலாம். அடுத்த 15 ஆண்டுகளில் திருமுருகன் காந்தி இளைஞர்களுக்கு வழிகாட்டக்கூடிய தலைவராக வருவார். என்னைப் பொறுத்தவரையில் இளைஞர்களை எனது கட்சிக்கு வாருங்கள் என்று கூட நான் கூற மாட்டேன், திருமுருகன் காந்தி பின்னால் செல்லுங்கள் என்பேன்.
தென் மாநிலங்களைப் பொறுத்தவரையில் மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்டுள்ள நிலையில் நமக்கு அதனால் எவ்வித தீங்கும் நேரவில்லை. மாறாக வடக்கு தான் நமக்கு எப்போதும் தீங்கை விளைவிக்கிறது. வடக்கில் இருந்து வீசக்கூடிய வாடைக்காற்றும் நமக்கு ஒத்துவராது, வடக்கே உள்ள கலாச்சாரமும் நமக்கு ஒத்து வராது. வடக்கு என்பது எப்போதும் நமக்கு எதிரானது. கொஞ்ச நாட்களாக சனாதன சக்திகள் ஆட்டம் போடுவதை பார்த்தால், தமிழ்நாட்டில் திராவிட உணர்வு செத்துப்போய் விட்டாதா என மனச்சோர்வு ஏற்படுகிறது. வரலாற்று திரிபு நூல்கள் மூலம் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவ முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனை தடுக்க நமக்கு கூர்மையான கருவி தேவை. அந்த கருவி, முற்போக்கு தலைவர்களின் புத்தகங்கள் தான். தமிழ்நாட்டின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளிலும் முற்போக்கு தலைவர்கள் கூறிய கருத்துகளை புத்தகங்களாக எடுத்துச் செல்லுங்கள். தமிழ்நாட்டின் விடைகளுக்கு இந்த திசை பதிப்பகம் ஓர் திசையாக இருக்கட்டும். இவ்வாறு அவர் கூறினார்.