பொது போக்குவரத்தில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை, நந்தனத்தில் உள்ள சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமையகத்தில் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமத்தின் முதல் குழுமக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார். கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:-
சென்னை நகர போக்குவரத்து நெரிசல் என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். பெருகிவரும் மக்கள் தொகைக்கும் நகர விரிவாக்கத்திற்கும் ஏற்ப நாம் போக்குவரத்து வசதிகளை திட்டமிட்டுப் பெருக்க வேண்டியுள்ளது. அதற்காக நாம் புதிய தொழில்நுட்பங்களை எந்த அளவிற்கு பயன்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும். உலகத் தரம் வாய்ந்த போக்குவரத்து முறை நமது தலைநகரில் அமைய வேண்டும். பொதுப் போக்குவரத்து எந்த அளவிற்கு சிறப்பாக கட்டமைக்கப்படுகிறதோ அந்த அளவிற்கு சாலைகளில் தனியார் வாகனங்களின் எண்ணிக்கையும், போக்குவரத்து நெரிசலும் குறையும், சுற்றுச்சூழல் மாசுபடுவதும் அதே அளவுக்குக் குறையும். எனவே பொது முக்கியத்துவம் வாய்ந்த இந்த அமைப்பானது தனது பணிகளை ஒருங்கிணைத்து, திட்டமிட்டு குறிப்பிட்ட கால வரம்பிற்குள் அவற்றை நிறைவேற்ற வேண்டும்.
பள்ளி மாணவ, மாணவியர் சிரமமின்றி சென்று வரும் வகையில், முக்கியமாக பள்ளி, கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகளில் அவை காலையில் துவங்கி மாலையில் முடியும் நேரத்தை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில், ஒரே பயணச்சீட்டில் சென்னை மாநகர பேருந்துகள், மெட்ரோ ரயில், புறநகர ரயில்களில் பயணிக்கும் வசதி குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.