டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயின் ஜாமின் மனு தள்ளுபடி!

சட்ட விரோதப் பணப் பரிமாற்ற வழக்கில், டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தாக்கல் செய்த ஜாமின் மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக இருப்பவர் சத்யேந்திர ஜெயின். இவர் மீது கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி சிபிஐ பதிவு செய்த வழக்கை அடிப்படையாக வைத்து, சட்ட விரோதப் பணப் பரிமாற்ற வழக்கையும் அமலாக்கத் துறை அதிகாரிகள் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதை அடுத்து கடந்த மே மாதம் 30 ஆம் தேதி இந்த வழக்கில், டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயின், திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த வழக்கில் ஜாமின் கோரி டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயின் சார்பில் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயின் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், சத்யேந்திர ஜெயின் தாக்கல் செய்த ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு கடந்த ஜூன் மாதம் அவரது ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டது குறிப்பிட்டத்தக்கது.